நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (4.7 எம்பி)

முள்ளிவாய்க்கால் முற்றச்சுவர் இடிப்பு: "சட்டரீதியாக எதிர்கொள்வோம்"-நெடுமாறன்

13 நவம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:24 ஜிஎம்டி

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் தமிழக அதிகாரிகளால் இடிக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது, இதை சட்டரீதியாகவும், மக்களைத் திரட்டியும் எதிர்கொள்ளுவோம் என்று கூறினார் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

இன்று புதன்கிழமை அதிகாலை சுமார் ஐந்து மணி அளவில், அதிகாரிகள் இந்த நினைவிடத்துக்கு வந்து நினைவிடத்தை ஒட்டி கட்டப்பட்டிருக்கும் பூங்காவில் இருந்த நீரூற்றுக்கள் போன்றவற்றையும், பூங்காவை ஒட்டி கட்டப்பட்ட வேலியையும், இடித்துத் தள்ளினர் என்று கூறிய நெடுமாறன், இந்த நடவடிக்கைக்கு காரணம் என்ன என்று தான் கேட்டபோது சரியான பதில் தரப்படவில்லை என்றார்.

Image caption அரசு செய்தது சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கை என்கிறார் நெடுமாறன்

அரசு புறம்போக்கு நிலத்தில், அரசின் அனுமதி வாங்கி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் ஒரு உடன்படிக்கையும் போட்ட பின்னரே பெரும் பொருட்செலவில் இந்த பூங்கா கட்டப்பட்டதாகக் கூறிய நெடுமாறன், ஆனால் இதை இடிப்பதற்கு முன்னர் அரசு அதிகாரிகள், முறைப்படி முன்னறிவிப்பு கூட தரவில்லை என்றார்.

இது குறித்து இடிக்க வந்த அதிகாரிகளிடம் கேட்டபோது , முன்னறிவிப்பு தரப்பட்டதாகக் கூறினார்கள், ஆனால் யாரிடம் தரப்பட்டது என்று தெளிவுபடுத்தவில்லை என்றார்.

அவர்கள் இடிப்பதிலேயே தீவிரமாக இருந்தார்கள், இதைத் தடுக்கவந்த மக்களையும் அடித்து விரட்டினார்கள் என்றார்.

'சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கை'

சட்டத்துக்கு புறம்பாக " இருட்டில் நடந்த திருட்டுக் காரியம்" என்று அவர் இந்த நடவடிக்கையை வர்ணித்தார். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், அரசு பகலில் முன்னறிவிப்பு கொடுத்துவிட்டு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்

ஜெயலலிதா அரசு மத்திய அரசின் நிர்ப்பந்தத்துக்கு பயந்து இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார் நெடுமாறன்.

ஒரு புறம் இலங்கைப் பிரச்சினையில் தீர்மானங்களை நிறைவேற்றியும், பிரதமருக்கு கடிதங்கள் எழுதியும் வரும், ஜெயலலிதா, இது போன்ற ஒரு புனிதமான நினைவுச்சின்னத்தை இடிக்க முற்படுவது, இலங்கைப் பிரச்சினையில் அவர் “ இரட்டை வேடம் “ போடுவதையே காட்டுகிறது என்றார் நெடுமாறன்.

தங்கள் மீது எந்த ஒரு வழக்கு போட்டாலும் அதை எதிர்கொள்ளத் தயார் என்றும் அவர் கூறினார்.