ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'சிங்கக் கொடியை தேசியக் கொடியாக ஏற்க முடியாது': வடக்கு அமைச்சர்

Image caption இலங்கையின் தேசியக் கொடியிலுள்ள 'வாளேந்திய சிங்கம்' சிங்களவர்களையே குறிக்கிறது: அமைச்சர்

இலங்கையின் வடக்கே, மன்னாரில் பள்ளிக்கூட விழாவொன்றின்போது நாட்டின் தேசியக் கொடியை ஏற்ற மறுத்த வடக்கு மாகாண அமைச்சர் ஒருவர், தம்மால் சிங்கக் கொடியை தேசியக் கொடியாக ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

சிங்கக் கொடி சிங்கள மக்களின் அடையாளம் என்றும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுவான கொடியை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தேசிய இனங்கள் எல்லாவற்றின் அம்சங்களையும் பிரதிபலிக்கும் விதத்தில் தேசியக் கொடி அமைய வேண்டும் என்றும், வாளேந்திய சிங்கம் சிங்களவர்களை மட்டுமே குறிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் வெவ்வேறான தேசியச் சூழல்கள் காணப்படுவதாகவும் அப்படி இரண்டு தேசியச் சூழல்களுக்கும் பொருந்தும் விதத்தில் அமையும் கொடியையே தான் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

'மாகாணசபைக் கொடிக்கு முக்கியத்துவம்'

Image caption வடக்கு மாகாணசபைக் கொடி

சிங்கக் கொடியை தேசியக் கொடியாக ஏற்கமுடியாது என்று வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போதும் தான் கூறிவந்ததாக ஐங்கரநேசன் கூறினார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நல்லெண்ணத்தைக் காட்டவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு இருப்பதாகவும், அதற்காக சிங்கக்கொடியை அப்புறப்படுத்திவிட்டு பொருத்தமானதை அரசாங்கம் கொண்டுவர வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் அரசியலமைப்பின்படி சிங்கக் கொடியே நாட்டின் தேசியக் கொடி.

அரசியலமைப்பைப் போற்றிப் பாதுகாப்பதாக சத்தியப் பிரமாணம் அளித்தே, மாகாணசபை பதவியை நீங்கள் பொறுப்பேற்றீர்கள் என்று அமைச்சரிடம் தமிழோசை சுட்டிக்காட்டியது.

தான் 'தேசியக் கொடியை அவமதித்ததாகக் கொள்ளமுடியாது' என்றும் தனது மனதுக்கு ஒவ்வாதச் செயலை தான் செய்யவிரும்பவில்லை என்றும் அமைச்சர் பதிலளித்தார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பள்ளிக்கூடங்கள், திணைக்களங்கள் போன்ற அரச நிறுவனங்களில் நடக்கும் நிகழ்வுகளின்போது மாகாணசபையின் கொடிக்கும் அதிகாரிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.