ஒரு பாலுறவுக் குற்றப் பிரிவை சரியென்கிறது இந்திய உச்சநீதிமன்றம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஒரு பாலுறவுக் குற்றப் பிரிவை சரியென்கிறது இந்திய உச்சநீதிமன்றம்

இந்தியாவில் ஒரு பாலுறவைக் குற்றமாக்கும் சட்டப்பிரிவை ரத்து செய்து டில்லி உயர்நீதிமன்றம் அளித்த முந்தைய தீர்ப்பை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

இந்தியக் குற்றவியல் சட்டத்தின் இது தொடர்பான 377வது பிரிவை அது மீண்டும் சட்டப்புத்தகத்தில் சேர்த்திருக்கிறது.

அந்த சட்டப்பிரிவை மாற்றும் அதிகாரம் இந்திய நாடாளுமன்றத்துக்கே இருக்கிறது, ஒரு பாலுறவு என்பது நீதிமன்றம் தலையிடக்கூடியப் பிரச்சினை அல்ல என்று தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

நீதிபதி சிங்வி மற்றும் நீதிபதி முக்கோபாத்யாயே தலைமையிலான அமர்வு, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377ன்படி, ஒரு பாலுறவு தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும், அந்த சட்டத்தின்படி, ஒரு பாலுறவில் ஈடுபடுவோருக்கு ஆயுள் சிறை தண்டனை வரை அளிக்கப்படலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

Image caption ஒரு பாலுறவுக் குற்றப் பிரிவை சரியென்கிறது இந்திய உச்சநீதிமன்றம்

ஒரு பாலுறவு ஆர்வலர்கள் இந்த தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாகக் கூறி, மீண்டும் தாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகி இந்த தீர்ப்பை மறு பரீசலனை செய்யக் கோரப்போவதாகக் கூறியிருக்கிறார்கள்.

மக்களின் சமத்துவம், அந்தரங்க மற்றும் கண்ணியத்துக்கான உரிமைக்கு இந்தத் தீர்ப்பு பேரிடியாக வந்திருக்கிறது என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் இந்தியப் பிரிவு கூறுகிறது.

உச்சநீதிமன்றம் இந்தியாவில் இருக்கும் பல நூற்றாண்டு பாரம்பரியத்தை சரியென்று வலியுறுத்தியிருக்கிறது, அது எந்த குடிமகனின் உரிமையையும் ஒடுக்கவில்லை, மாறாக , நாட்டின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளையும், விழுமியங்களையும், அது புரிந்து கொண்டிருக்கிறது என்று அனைத்திந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியத்தின் உறுப்பினர் ஸபர்யாப் ஜிலானி பிபிசியிடம் கூறினார்.

2001ஆம் ஆண்டில் நாஸ் அறக்கட்டளை எனப்படும் எய்ட்ஸ் மற்றும் பாலியல் சுகாதாரத்திற்காக செயல்படும் ஒரு அமைப்பு டில்லி உயர்நீதி மன்றத்தில் ஒரு பொது நலன் வழக்கு பதிவு செய்திருந்த்து. அதில் ஒருவரின் பாலியல் விருப்பத்தின் அடிப்படையில் அந்த நபர் சட்டரீதியில் குற்றவாளியாக கருதப்படும் இந்திய அரசியல் சட்டத்தின் 377 வது பிரிவை திருத்த வேண்டும் என்று கோரி மனு அளிக்கப்பட்டது.

இதை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றத்தின் உயர் நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா மற்றும் நீதிபதி எஸ்.முரலிதா ஆகியோரின் அமர்வு வயதுக்கு வந்தவர்களுக்கு இடையிலான பரஸ்பர சம்மதத்துடன் மேற்கொள்ளப்படும் ஒருபாலுறவு சட்டப்படி குற்றமல்ல என்று 2009ஆம் ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியமும், மற்ற பல அரசியல், மத மற்றும் சமுகக் குழுக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, இந்த சட்டப்பிரிவினை மீண்டும் சேர்க்க வலியுறுத்தின.