ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஹெராயின் கடத்தலில் சிக்கித் தவிக்கும் இலங்கை

  • 15 டிசம்பர் 2013
Image caption இலங்கை காவல்துறை இந்த ஆண்டில் சுமார் 350 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் போதைப் பொருளை கைப்பற்றியுள்ளது

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2013-ம் ஆண்டிலேயே கூடுதலான ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

போதைப் பொருள் பாவனை மற்றும் கடத்தல்- வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி தங்களுக்கு அறிவிக்குமாறும் காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதற்காக சிறப்பு தொலைபேசி இலக்கமாக 011-23 43 333- என்ற எண்ணை காவல்துறை அறிவித்துள்ளது.

அண்மைய நாட்களில் கைப்பற்றப்பட்ட இரண்டு ஹெராயின் கொள்கலன்கள் உட்பட இந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக சுமார் 350 கிலோகிராம் ஹெராயின் போதைப் பொருள் இலங்கை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோஹண பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கு எந்த வழிகள் ஊடாக போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன என்று விசாரணை நடத்திவருவதாக அவர் கூறினார்.

'மன்னார் ஊடாக கடல் மார்க்கமாக வருகிறதா, விமானநிலையம் ஊடாக வருகிறதா அல்லது கப்பல் கண்டயினர்கள் மூலமாக வருகிறதா போன்ற பல்வேறு கோணங்களில் நாங்கள் விசாரணை நடத்திவருகின்றோம். அவைபற்றி ஊடகங்களுக்கு வெளியிடமுடியாது. ஒரு வழியை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். அந்த கடத்தல் வலையமைப்பை முறியடிக்கும் வேலையில் நாங்கள் இறங்கியிருக்கிறோம்' என்றார் காவல்துறை பேச்சாளர்.

பின்புலத்தில் அரசியல்வாதிகள்?

Image caption பிரதமர் டி.எம். ஜயரத்னவின் தனிப்பட்ட செயலாளர் ஹெராயின் கொள்கலன்கள் தொடர்பான சர்ச்சையை அடுத்து பதவி விலகியுள்ளார்

இந்த போதைப்பொருள் கடத்தல்களில் இலங்கை அரசியல்வாதிகளின் பின்புலம் இருக்கிறது என்று சில குற்றச்சாட்டுக்கள் உள்ளமை பற்றி தமிழோசை காவல்துறை பேச்சாளரிடம் கேள்வி எழுப்பியது.

'அரசியல்வாதிகளின் தொடர்பு இருப்பதாக இன்னும் எங்களுத் தெரியவில்லை. ஹிக்கடுவையில் நேற்றுமுன்தினம் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட நபர் 8 மாடிக் கட்டடம் ஒன்றைக் கட்டிவரும் வர்த்தகர் என்று தெரியவந்திருக்கிறது. ஆனால் அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை' என்றார் அஜித் ரோஹண.

ஆனால், இலங்கை சுங்கப்பிரிவினர் கைப்பற்றியதாக கூறியுள்ள சுமார் 260 கிலோ எடையுடைய ஹெராயின் போதைப்பொருளில் 130 கிலோ தான் இப்போது இருப்பதாகவும், மிகுதி 130 கிலோ காணாமல்போய்விட்டது என்று காவல்துறையை மேற்கோள்காட்டி ஜேவிபி குற்றஞ்சாட்டியிருக்கிறது.

அது பற்றி கேட்டபோது, 'பேப்பவேர் சோம்னிஃபேரம் (Papaver somniferum) என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட தாவரத்திலிருந்து வருகின்ற சுத்த ஹெராயினின் அளவைத் தான் இரசாயன ஆய்வுப் பிரிவினர் கூறியிருக்கின்றனர், இலங்கைக்கு வரும் ஹெராயின் போதைப்பொருளில் வேறு பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருக்கும். இந்த சட்டவிரோத கடத்தல் வியாபாரத்தில் நடக்கும் இன்னொரு கறுப்பு வியாபாரம் தான் அது' என்றும் இலங்கை காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.

அண்மையில், இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இரண்டு ஹெராயின்-கொள்கலன்கள் தொடர்பில் எழுந்த சர்ச்சைகளை அடுத்து பிரதமரின் தனிப்பட்ட செயலாளர் பதவி விலகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.