கொழும்பில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொழும்பில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - காணொளி

இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமெரிக்காவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று நடந்துள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவான ஒரு குழுவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்காவின் போர்க்குற்றங்களுக்கான சிறப்புத் தூதர் ஸ்டிபன் ராப் இலங்கைக்கு சென்றிருக்கும் நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக நடந்திருக்கிறது.

இலங்கை மனித உரிமைகள் குறித்து விமர்சிக்கும் அமெரிக்கா, தானே அவற்றை மீறிவருவதாகக் கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில், இரு தரப்பும் இழைத்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை உரிய வகையில் விசாரிக்க வேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஸ்டீபன் ராப் இலங்கைக்கு வந்துள்ளார்.

வடக்கில் இலங்கை இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை அவர் பார்வையிடும் படங்களையும் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

இலங்கை இராணுவம் நூற்றுக்கணக்கான குடும்பங்களை கொன்றது என்பது தமது அதிகாரபூர்வ நிலைப்பாடு என்று அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது. முன்னை காலங்களை விட அமெரிக்கத் தூதரக அறிக்கையின் வார்த்தைகள் கடுமையாக இருப்பதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

இலங்கை மறுப்பு

இலங்கையில் நடைபெற்ற போரின் போது, இரணப்பளையில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் இலங்கை ராணுவத்தின் ஷெல் வீச்சுத் தாக்குதலால் கொல்லப்பட்டனர் என்ற அமெரிக்க தூதரகக் குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் மறுத்திருக்கிறது.

இந்த குறிப்பிட்ட இடத்தை விடுதலைப்புலிகள் தங்களது கொல்லப்பட்ட போராளிகளின் உடல்களை ஒப்புவிப்பதற்காகப் பயன்படுத்தியதாக, உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள் என்றும், இது பாதுகாப்பான இடமாக இல்லாவிட்டால், அதை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள் என்றும் இலங்கை ராணுவத்துக்காகப் பேசவல்ல பிரிகேடியர் ருவான் வணிகசூர்ய ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.

பொதுமக்கள் இருந்த போது, இந்த இடத்தில் ஷெல் தாக்குதல் சம்பவம் ஒரு போதும் நடக்கவில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுவதாகவும் பிரிகேடியர் கூறுகிறார்.

அமெரிக்கத் தூதரகத்தின் குற்றச்சாட்டு “அடிப்படையற்றது” என்று கூறும் இலங்கை ராணுவப் பேச்சாளர், நம்பகத்தன்மையுடன் சரிபார்க்கப்படாமல் இத்தகைய ஒரு குற்றச்சாட்டை அமெரிக்கத் தூதரகம் முன்வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

இவை குறித்து ஆராயும் காணொளி.