ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கைக்கு பிரிட்டன் இராணுவப் பயிற்சி; இந்திரா காந்தி எதிர்த்தார்

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption மறைந்த பிரதமர் இந்திரா காந்தி

பிரித்தானியாவில் இருந்து இயங்கிய தனியார் இராணுவ பயிற்சி நிறுவனமொன்று, 1980-களின் முற்பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கு சிறப்பு பயிற்சிகொடுக்க பிரிட்டிஷ் அரசு அனுமதி அளித்திருந்ததாக அண்மையில் வெளியாகியுள்ள அரச ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

முன்னதாக, பிரிட்டனின் எஸ்ஏஎஸ் என்றசிறப்பு இராணுவப் படையணியின் முன்னாள் அதிகாரிகளைக் கொண்ட இந்த தனியார் பயிற்சி நிறுவனம் இந்திய இராணுவத்திற்கும் பயிற்சி அளித்திருந்ததாக ஆவணங்கள் வெளியாகியிருந்தன.

அதே காலப்பகுதியிலேயே, இந்தியாவில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான தாக்குதலின்போது இந்தியப் படையினர் சீக்கியர்களின் பொற்கோவிலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருந்தமையால் இந்த ஆவணங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

அதேபோல், இலங்கை இராணுவத்துக்கும் பிரிட்டனின் முன்னாள் எஸ்ஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு பயிற்சிகளை அளித்துள்ளதாக பிாிட்டிஷ் அரசின் ஆவணங்கள் கூறுகின்றன.

இந்திரா காந்தி அதிருப்தி

Image caption இந்தியா கொடுத்த அழுத்தம் காரணமாகவே ஜனாதிபதி ஜேஆர் உடன்படிக்கைக்கு முன்வந்தார்: ஹரிஹரன்

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில், 1980களின் முற்பகுதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தீவிரமடைந்திருந்த காலத்தில் அவற்றை முறியடிக்கும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் இறங்கியிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் பிரிட்டனிலிருந்து இயங்கிய தனியார் இராணுவ பயிற்சி நிறுவனமொன்று, இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி அளிக்க அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா இந்த இராணுவ பயிற்சியை இலங்கை இராணுவத்துக்கு கொடுக்க அனுமதிக்கக் கூடாது என்று அப்போதைய பிரதமர் மார்கிரட் தாட்சரிடம் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கோரியிருந்ததாகவும் பிரிட்டிஷ் அரச ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

சீக்கியர்களின் பொற்கோவின் உள்ளே நுழைந்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக, இந்திரா காந்தி பிரிட்டனிடம் இலங்கை பற்றி பேசியுள்ளதாகவே பிரிட்டனின் த கார்டியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிரடிப் படையணி உருவாக்கம்

படத்தின் காப்புரிமை AFPGetty Images
Image caption அதிரடிப்படை இலங்கைப் போரில் முக்கிய பங்கு வகித்தது: ஹரிஹரன்

இதேவேளை, பனிப்போர் காலத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க நினைத்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட கூட்டாளி நாடுகள் இலங்கைக்கு இராணுவப் பயிற்சி வழங்க முன்வந்ததாக இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரியும் இலங்கை பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பான பகுப்பாய்வாளருமான கர்ணல் ஹரிஹரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அக்காலப் பகுதியில் இந்தியா சோவியட் ரஷ்யாவின் கூட்டாளியாகவே அறியப்பட்டது.

பிரிட்டனின் முன்னாள் எஸ்ஏஎஸ் அதிகாரிகளின் பயிற்சியின் மூலமே, 1987க்கு முன்னதாகவே இலங்கையில் சிறப்பு அதிரடிப்படை என்ற தாக்குதல் படையணி உருவாக்கப்பட்டதாகவும் கர்ணல் ஹரிஹரன் சுட்டிக்காட்டினார்.

இந்த அதிரடிப் படையினரே இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தின்போது முக்கிய தாக்குதல் அணியாக செயற்பட்டுள்ளதாகவும் ஹரிஹரன் தெரிவித்தார்.