நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.2 எம்பி)

"இலங்கை விடயத்தில் தமிழக மக்களின் விருப்பத்துக்கேற்ப இந்திய அரசு நடக்கும்"

28 பிப்ரவரி 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:09 ஜிஎம்டி

ஐ.நா.சபையில் வரவிருக்கும் தீர்மானத்தில் இலங்கை தமிழர்களின் நலனுக்கு தேவையான நல்ல முடிவினை இந்திய அரசு உறுதியோடு எடுக்கும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் வெள்ளிகிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், ஏற்கனவே இந்திய அரசு இலங்கை தமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா. சபையில் வாக்களித்துள்ளதாக கூறினார்.

"இலங்கை விவகாரத்தில் தமிழக மக்களின் விருப்பத்தை காங்கிரஸ் அரசு நிறைவேற்றும்"

ஜி கே வாசன்

இலங்கை மக்களுடைய நம்பிக்கையை பெரும் வகையிலும், எதிர்காலத்தில் அனைவரும் சமமான உரிமையுடன் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க இந்திய அரசு உறுதியோடு இந்த முறையும் ஐ.நா.வில் முடிவு எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் ராஜீவ் கொலையாளிகள் வழக்கின் விவகாரத்தில், மற்ற அனைத்து கட்சிகளும் ஒரே கருத்தை வலியுறுத்துவது போலும், காங்கிரஸ் கட்சி மட்டும் அனைவருக்கும் எதிரான கருத்தை வலியுறுத்துவதாகவும் கூறுவது தவறு என்றார்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் முடிவினை தமிழக பொதுமக்கள் ஏற்கவில்லை என்று கூறிய அவர், மக்களின் எண்ணங்களை தமிழக காங்கிரஸ் கட்சியினர் தங்களது கருத்துக்கள் மூலம் பிரதிபலித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

"கச்சத்தீவை மீட்போம்"

செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், கச்சதீவு விவகாரத்தை பொறுத்த வரையில் தானும், தமிழக காங்கிரஸ் கட்சியினரும் மத்திய அரசின் தற்போதைய நிலைபாட்டை மாற்றிக்கொள்ள தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்றார்.

மேலும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துவதையும் நிறுத்த மத்திய அரசு வலுவான நடவடிக்கை எடுக்க கூறியும் வலியுறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

"சேது சமுத்திரம் திட்டத்துக்கு ஆதரவு"

முன்னதாக சேது சமுத்திர திட்டம் குறித்து பேசியபோது, தமிழகத்தின் தென்மாவட்ட மக்களின் கனவு திட்டமான இந்த திட்டம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பயனளிக்கும் என்பதால், இதன் முக்கியத்துவம் குறித்து மத்திய அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும், அதன் செயலாக்கத்துக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

இந்த திட்டதிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு மற்றும் சில அமைப்புகள், தடை ஏற்படுதும் நோக்கத்திற்காக இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து பல புதிய தவறான காரணங்களை கூறும் போது அவற்றை தெளிவுப்படுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளதால் இத்திட்டத்திற்கு மேலும் காலதாமதம் ஏற்படுவதாக வருத்தம் தெரிவித்தார்.

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், மூன்று முறை மாற்றப்பட்டுள்ளதும் வழக்கின் தமாதத்திற்கு ஒரு காரணமாக கருதப்படுவதால், மத்திய அரசும் தாமதப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவது போன்ற சந்தேகத்தை எழுபியுள்ளதாக கருதப்படுவது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு பதிலளித்த ஜி.கே.வாசன், முழுமையாக இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.

சில காரணங்களுக்காக சேது சமுத்திரம் திட்டத்தை தமிழக அரசும், சில அமைப்புகளும் எதிர்ப்பதால், அவர்களின் மனுக்களுக்கு நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருப்பதால்தான் தாமதம் ஏற்படுவதாக கூறினார்.