ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியாவில் பேஸ்புக்கின் வளர்ச்சி எதைக் காட்டுகிறது?

  • 10 ஏப்ரல் 2014
Image copyright AFP
Image caption அமெரிக்காவுக்கு அடுத்தபடி இந்தியாவில் பேஸ்புக்கின் வளர்ச்சி

இந்தியாவில் பேஸ்புக் என்ற சமூக ஊடகத்தின் தீவிர பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டிவிட்டது என்று பேஸ்புக் நிறுவனம் நேற்று புதன்கிழமை அறிவித்திருந்தது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடி இந்த பிரபலமான சமூக ஊடகத்தினைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வளர்ந்து வரும் ஆசிய நாடான இந்தியாவில் தான் அதிகம் என்ற தகவல் பலருக்கு ஆச்சர்யத்தைத் தந்திருக்கும்.

தொழில்நுட்ப வளர்ச்சியில் கடந்த சுமார் 25 ஆண்டுகளாகவே முன்னேறிவரும் இந்தியாவில் இணையத்தின் வளர்ச்சியும் , அதனைச் சார்ந்த விஷயங்கள் இந்தியாவில் ஏற்படுத்திவரும் சமூக, பொருளாதார மற்றும் கலாசார மாற்றங்கள் ஒரு ஆய்வுக்குரிய விஷயங்கள்தான்.

பேஸ்புக் இந்தியாவில் பெற்றிருப்பதாகக் கூறும் இந்த வளர்ச்சி குறித்து , இணைய ஆர்வலர் மற்றும் மென்பொருள் வல்லுநர் மணி மு.மணிவண்ணன் அவர்கள் தமிழோசையிடம் கருத்து தெரிவிக்கையில், இந்த வளர்ச்சி மகத்தானது என்றார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இணையம் பிறந்தபோது, அது இந்தியாவுக்கு வருமா என்ற சந்தேகங்கள்கூட நிலவின , ஆனால் இப்போது இந்த வளர்ச்சி உண்மையில் பிரமிக்கவைக்கிறது என்றார்.

இதற்குக் காரணம், தொலைதொடர்புத் துறையில், ஏற்பட்ட பெரும் வளர்ச்சிதான் என்றார் மணிவண்ணன்.

சிறு நகரங்களில் கூட ஓரளவு நம்பகமான தொலைதொடர்பு வசதிகள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்றார் அவர்.

பேஸ்புக்கின் இந்த வளர்ச்சி குறித்து தீவிர பேஸ்புக் பயன்பாட்டாளரும், பெங்களூரில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவருமான, பிரதீபா பாண்டியன் கருத்து தெரிவிக்கையில்,இது ஒரு வரவேற்கத்தக்க விஷயம் என்றார்.

சென்னையில் வசிக்கும் நடனக் கலைஞரும், பேஸ்புக் பயன்பாட்டாளருமான ரீத்து குணா லியோ, பேஸ்புக் நம் அனைவரிடமும் உள்ள “கவனத்தைப் பெற வேண்டும்” என்ற ஆர்வத்தைப் பூர்த்தி செய்கிறது. இதுவே இதன் வெற்றிக்குக் காரணம் என்றார்.

பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் எந்த அளவுக்கு கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றன, எந்த அளவு ஜனநாயக் பண்புகளை அவை மேம்படுத்துகின்றன, அல்லது அவைகளைப் பாதிக்கின்றன, அந்தரங்க உரிமைகள் மீறப்படுகிறதா, சமூக திறன்கள் பாதிக்கப்படுகின்றதா என்பது குறித்த பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இவர்களின் கருத்துக்கள் அடங்கிய பெட்டகத்தை இந்தப் பக்கத்தில் ஒலி வடிவில் கேட்கலாம்.