ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆப்கன் ஹேராத் மாகாணத்தில் தமிழக பாதிரியார் கடத்தல்

ஆப்கானிஸ்தானில் ஹேராத் மாகாணத்தில் ஏசு சபை, அதாவது ஜெசூட்டுகள் அமைப்பின் சார்பாக அகதிகளுக்கு கல்வி வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த தமிழ்நாட்டின் தேவகோட்டையைச் சேர்ந்த பாதிரியார், அலெக்ஸிஸ் ப்ரேம்குமார், நேற்று திங்கட்கிழமை , சில அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து தேவகோட்டையில் உள்ள அவரது சகோதரர் ஆல்பெர்ட் மனோகரன் பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவிக்கையில், தனது சகோதரர் அலெக்ஸிஸ் கடந்த மூன்றாண்டுகளாக ஹேரத்தில் அகதிகளுக்குக் கல்வி வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், தொடர்ந்து இணைய தொடர்பில் இருந்து வந்ததாகவும் தெரிவித்தார்.

அவர் பணியாற்றிய காலத்தில் அவருக்கு தீவிரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருந்ததாகத் தமக்குத் தகவல் இல்லை என்றார் மனோகரன்.

ஆனால் சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்துத் தமக்கு முழுமையாகத் தெரியவில்லை என்று கூறிய அவர், இது குறித்து, ஹேரத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தனக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு , அவரைத் தேட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுவருவதாகக் கூறியதாகத் தெரிவித்தார்.

ஆனால் இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து நேரடியாகத் தமக்கு எந்தத் தொடர்பும் மேற்கொள்ளப்படவில்லை என்றார் அவர்.

சிவகங்கை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதனிடம் தான் தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து உதவுமாறு கோரியிருப்பதாகவும், அவரும் அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக உறுதியளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.