ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அலைகள் ஓய்வதில்லை -- சிருஷ்டி உணர்வும் கூடத்தான் - காணொளி

  • 11 ஜூலை 2014

இது ஒரு வித்தியாசமான கலை. இதை ஸ்டுடியோவில் பார்க்க முடியாது. இதை சொந்தமாக வைத்துக்கொள்ள முடியாது. இது நீண்ட நேரம் கூட நீடித்திருக்காது.

ஆனாலும் இது ஒரு கலைதான்.

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் வசிக்கும் கலைஞர், ஆண்ட்ரெஸ் அமேடாருக்கு, கடற்கரைதான் கலையரங்கம். அங்கு விரிந்து கிடக்கும் மணற்பரப்புதான் அவரது ஓவியத்திரை. அதில் ஒவ்வொரு கலைப்படைப்பையும் அவர் உருவாக்க அவருக்கு பல மணிநேரங்கள் பிடிக்கிறது.

ஆனால் அலை ஒன்று பெரிதாக அடித்தால், கண நேரத்தில் அந்த உழைப்பு வீணாகிறது.

இந்த மணற்சித்திரக் கலைஞர் ஆண்ட்ரெஸ் அமேடார் இதனால் மன அயர்ச்சி அடைந்துவிடுவதில்லை.

அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னரே அவர் தனது கலைப்படைப்பை உருவாக்கத் தொடங்குகிறார். நாள் முழுவதும் மணலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது அவருக்கு.,

கற்பனைக்குதிரையைத் தட்டிவிடுகிறார். வடிவக் கணித ( ஜியோமெட்ரிக்) முறையில் அமைந்த சித்திரங்களை உருவாக்குகிறார்.

அவை பெரிதும் சிறிதுமானவை ஆனால் எல்லாமே வித்தியாசமானவை.

"இயற்கைதான் எனக்குப் பெரிய உந்துதலைத் தருகிறது. என்னைச் சுற்றி நான் காணும் உலகில் பார்ப்பவைகளை நான் மொழிபெயர்த்து புரிந்துகொள்ள விரும்புகிறேன். இது ஒரு விதத்தில் அறிவியல் ரீதியான ஆய்வு போன்றதுதான்" என்கிறார் அமேடார்.

அவர் கடல் மணலைக் கிளறி, மேல் மட்டத்துக்கு பல்வேறு வண்ணங்களைக் கொண்டு வருகிறார்.

மணலில், அகலமான , குறுகிய வெட்டுக்களின் மூலம் பிரமிக்கத்தக்க வடிவங்களை உருவாக்குகிறார்.

இந்த வடிவங்கள் சரியாக இருக்கின்றதா என்று தரையில் இருந்தபடியே பார்ப்பது சிரமம்.

எனவே இதை வானிலிருந்து பார்க்க ஒரு 'க்வாட் காப்டர்' என்ற தொலைதூரத்தில் இருந்து இயக்கும் குட்டிவிமானத்தில் வைத்த கேமரா மூலம் படமெடுக்கிறார்.

கடற்கரைக்கு வருவோர் இவரது கலை வடிவங்களை மிகவும் விரும்பி ரசிக்கிறார்கள்.

இதைப் பார்க்கவென்றே பல மைல் தொலைவுக்கு அப்பாலிருந்து கூட வருகிறார்கள்

ஆண்ட்ரெஸ் அமெடார் ஒரு சுற்றுச்சூழல் விஞ்ஞானியாக இருந்தார் . அந்த வேலையை விட்டுவிட்டு இந்தக் கலைப்படைப்புகளை உருவாக்குவதில் இப்போது இறங்கிவிட்டார்

" இது எனக்கு மேலும் பல கதவுகளைத் திறந்திருக்கிறது. இது வரை நான் நினைக்காத பல விஷய்ங்களை சாதிக்க முடிந்திருக்கிறது. மணலைக் கிளறி வாழ்க்கையை நடத்த முடியும் என்று நான் நினைத்ததேயில்லை", என்கிறார் அமேடார்.

கடல் அலை வந்து கஷ்டப்பட்டு தான் உருவாக்கிய படைப்பை கடல் அலை ஒரு நொடியில் அழித்துவிடுவதைப் பற்றி ஆண்ட்ரெஸ் கவலைப்படவில்லை. அழித்தால் என்ன , புதிய ஓவியத்திரையாகத்தான் மணற்பரப்பு அடுத்த நாள் கலையில் மீண்டும் இருக்கிறதே