Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 ஏப்ரல், 2011 - பிரசுர நேரம் 15:35 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
உயிரிழப்பு மதிப்பீடுகளை புறந்தள்ள முடியாது: ஐ.நா.
 
யுத்தத்தில் இறந்த பொதுமக்கள் சிலரின் சடலங்கள்
இலங்கை யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் பொதுமக்கள் நாற்பதாயிரம் பேர் வரையிலானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற மதிப்பீடுகளை தற்போதைக்கு புறந்தள்ள முடியாது என ஊடகங்களில் கசிந்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தெரிவிக்கிறது.

ஐ.நா. நிபுணர் குழுவின் முழுமையான அறிக்கை இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படாதுள்ளது.

அந்த அறிக்கையின் பாகங்களை கசிந்துள்ளதாகக் கூறி இலங்கையிலுள்ள நாளிதழ்கள் - குறிப்பாக அரச சார்பு செய்தி நாளிதழ்கள் கட்டம் கட்டமாக அவ்வறிக்கையின் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதி்ரான குற்றங்கள் என்று கூறும் அளவுக்கு சர்வதேச சட்டங்களை மீறும் வகையிலான பெரும் குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐ.நா. நிபுணர் குழு கண்டறிந்துள்ளது என இலங்கையில் அண்மையில் கசிந்த ஐ.நா. குழுவின் அறிக்கையுடைய சுருக்கங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

"கசிந்த தகவல்கள் சரியானவையே"

அதற்கு இலங்கை அரச தரப்பிலிருந்தும், அங்குள்ள பெரும்பான்​மைக் கட்சிகளிடமிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை வரவேற்பதாக தமிழோசையிடம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, இவ்வாறு வெளியாகியுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்கள் சரி்யானவை தான் என்பதை ஐ.நா. அதிகாரிகள் பிபிசிக்கு மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்திவிட்டுள்ளனர்.

ஆக கசிந்துள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் வெளியாகியுள்ள முக்கிய விடயங்கள் பின்வருமாறு:

  • இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டு காலம் கடந்துவிட்டுள்ளது என்றாலும், இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படக் கூறமுடியாதுள்ளது. ஆயினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் பேர் என்று பல்வேறு வழிகளிலும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையை நிராகரித்துவிட முடியாது என்று ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.
  • முழுமையான விசாரணைகளின் மூலமே கொல்லப்பட்ட மக்களின் மொத்தக் கணக்குப் பற்றிய முடிவொன்றுக்கு வரமுடியும் என்பதையும் ஐ.நா. நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது.
  • வன்னியில் போரின்போது அங்கு சிக்கியிருந்த மக்களின் எண்ணிக்கை எத்தனை என்பது தெரியாத நிலையில், அந்த எண்ணிக்கை மூன்று லட்சத்து 30 ஆயிரம் வரை இருக்கலாம் என்றளவில் கணிக்கப்பட்டிருந்தது.
  • அத்தோடு போர் வலயத்திலிருந்து வந்த மக்களை பிரித்து அவர்களை முகாம்களுக்கு அனுப்பிய நடைமுறை வெளிப்படையாக நடைபெறாத காரணத்தினால் அங்கிருந்து எத்தனை பேர் வந்தார்கள் என்ற விபரங்கள் இல்லை.
  • இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளும் கட்டாயப்படுத்தி ஆட்களைப் படையில் சேர்தததால் புலிகளின் எண்ணிக்கை பற்றிய விபரங்களும் இல்லை.
  • அதுமட்டுமன்றி பெருமளவிலான கொல்லப்பட்ட மக்களின் இறப்புகள் எதுவும் பதியப்படாமலேயே அவர்கள் புதைக்கப்பட்டுவிட்டார்கள்.

என்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையிலிருந்து கசிந்த விபரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையிலிருந்த ஐநா அலுவலக அதிகாரிகள் கொடுத்த புள்ளிவிபரங்களையும் நிபுணர் குழு கருத்தி்ல் எடுத்துள்ளது.

ஐ.நா. இதுவரை வெளியிடாது வைத்திருந்த புள்ளிவிபரங்களின் படி, ஆகஸ்ட் 2008 முதல் மே 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பொதுமக்கள் 7,721 கொல்லப்பட்டும் 18,479 பேர் காயமடைந்தும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் 2009 பிப்ரவரியில் ஐ.நா. அதிகாரிகள் உயிர்ச் சேதங்கள் பற்றிய கணக்கெடுப்புகளை மேற்கொள்ள முயற்சித்த போதிலும் அதன் பின்னர் போர் வலய மக்களை சென்றடைவதற்காக வழிகள் இல்லாமையால் அந்த முயற்சிகளும் கைகூடவில்லை எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் இழப்புகளின் புள்ளி விபரங்கள் பற்றி ஐ.நா. எடுத்துக்கூறிய போதெல்லாம் அந்த எண்ணிக்கைகளை கட்டுக்கதைகள் என இலங்கை அரசு புறந்தள்ளியது என்பதையும் ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையில் பொதுமக்களின் இழப்புகள் பற்றிய பாகத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள