கேலக்ஸி நோட் செவன் திறன்பேசியின் விற்பனை, பரிமாற்றத்தை நிறுத்த சாம்சங் வலியுறுத்தல்

தென் கொரிய மின்னணு நிறுவனமான சாம்சங், அதன் கேலக்ஸி நோட் செவன் திறன்பேசியின் (Galaxy Note Seven smartphone) விற்பனை மற்றும் பரிமாற்றத்தை நிறுத்துமாறு, உலகம் முழுவதும் உள்ள தனது தொழில் கூட்டாளிகளை வலியுறுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சாம்சங் கேலக்ஸி நோட் செவன்

பேட்டரியில் உள்ள பிரச்சனைகள் காரணமாக அந்த அலைபேசி தீ பிடிக்கும் நிகழ்வுகள் ஏற்படுவதாகத் தொடர்ந்து கூறப்படுவதாலும், தீ பிடிக்கும் பிரச்சனை காரணமாகக் கொடுக்கப்பட்ட மாற்று அலைபேசிகள் சிலவற்றிலும் இது தொடர்வதாலும், சாம்சங் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த போனை பயன்படுத்துவோர், பேட்டரியை சார்ஜ் செய்யவேண்டாம் என்றும் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதை நிறுத்துமாறும் சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.

சமீபமாக வெளியான ஆப்பிள் ஐ போனின் மாடலுக்குப் போட்டியாக தனது கேலக்ஸி நோட் செவன் போனை அறிமுகப்படுத்திய தென் கொரிய நிறுவனமாக சாம்சங் நிறுவனத்திற்கு அந்த திறன் பேசியில் ஏற்பட்ட பிரச்சனைகள் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.