கேலக்ஸி நோட்7 திறன்பேசியை திரும்பப் பெற்றுக்கொள்ள சாம்சங்கை நிர்பந்தித்த காரணங்கள்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட்7 திறன்பேசியை திரும்பப் பெற்றுக்கொள்ள இரண்டாவது முறையாக செய்த அறிவிப்பு அந்த நிறுவனத்திற்கும் பரந்துபட்ட அளவில் மொபைல் போன் துறைக்கும் முன்னுதாரணமற்ற பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதற்கு முன்பு, பெரிய அளவில் பேட்டரியில் உள்ள பிரச்சனைகளுக்காக மொபைல் போன்கள் திரும்பப் பெறப்பட்ட சம்பவங்கள் இருக்கின்றன.

2007ல் நோக்கியா நிறுவனம்,பேட்டரிகள் அதிகமாக சூடாகின்றன என்ற அச்சத்தால் 46 மில்லியன் பேட்டரிகளை திரும்பப் பெற்றது.

ஆனால் அந்த சம்பவங்களில் எல்லாம், பேட்டரிகள் மாற்றப்படக்கூடிய வகையில் இருந்ததால், நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு பிரபலமான போன், சந்தையில் இருந்து அகற்றப்படவேண்டிய நிலை ஏற்படவில்லை.

''உங்கள் செல்பேசியை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். அதில் உள்ள உங்களது தகவல்களை வேறொரு கருவியில் சேமித்து வைத்துவிட்டு, போனை நிறுத்தி வையுங்கள், '' என்று கேலக்ஸி நோட் 7 பயன்பாட்டாளர்களிடம், சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. பேட்டரியில் தீ பிடிப்பதை உறுதி செய்த அடுத்த நாள் சாம்சங் இவ்வாறு தெரிவித்தது. அது மேலும், நோட் 7 தயாரிப்பு பணிகளை நிறுத்தியது.

ஒரு இழப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பயன்பாட்டாளர்கள் தங்களது பணத்தை முழுவதுமாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது சாம்சங்கின் ''பேப்லட்'' சாதனத்தை, பழைய சிறிய திரை கொண்ட கேலக்ஸி எஸ் 7 அல்லது எஸ் 7 எட்ஜ் போனும் பாதியளவு பணத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்பது அந்தத் திட்டம்.

படத்தின் காப்புரிமை Getty Images

அலைபேசிகள் வெடிக்கக் காரணம் என்ன ?

கடந்த மாதம் சாம்சங் , இந்த போன்களைத் திரும்பப் பெறத் தொடங்கிய போது, "பேட்டரி செல் பிரச்சினை" காரணம் என்று சுட்டிக்காட்டியது.

அலைபேசித் துறை கட்டுப்பாட்டாளர்களுக்கு, சாம்சங் நிறுவனம் அனுப்பிய ஒரு அறிக்கை அந்தக் குறைபாடு பற்றி மேலும் விவரமளித்தது. அதில், உற்பத்தியின்போது நேர்ந்த தவறால், பேட்டரி சற்று பெரியதாகத் தயாரிக்கப்பட்டது என்றும், இதனால், பேட்டரியை போனில் பொருத்துவதில், சிக்கல் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டிருந்ததாக கசிந்த செய்தியை வெளியிட்டது ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம்.

இந்தப் பிரச்சனைக்கு காரணம், போனின் பாகங்களைத் தயாரிக்கும் 'உற்பத்தியாளர் சாம்சங் எஸ்.டிஐ (Samsung SDI) என்று கூறப்பட்டது. இதனால், ஏ.டி.எல். ( ATL) என்ற மற்றொரு நிறுவனம் தயாரித்துள்ள பேட்டரிகளை பொருத்தி பிரச்சனையைத் தீர்த்தனர் என்று கூறப்பட்டது..

படத்தின் காப்புரிமை Getty Images

தற்போது இரண்டாம் கட்டமாக வெளியிடப்பட்ட போன்கள் பலவும் அதிகமாக சூடாகும் நிலையில், உண்மையான பிரச்சனை, தவறாகக் கண்டறியப்பட்டுள்ளதா என்பது தெளிவாவில்லை.

சாம்சங் பொறியாளர்கள் போன்களில் பிரச்சினையை உருவாக்கி, வெடிக்க வைக்க முயன்ற போது, அவை வெடிக்கவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

''கேலக்ஸி நோட் 7 குறித்து சமீபகாலத்தில் எழுந்துள்ள பிரச்சனைகளை விசாரிக்க, இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒழுங்கு நிறுவனங்களோடு வேலைசெய்து வருகிறோம், '' என்ற இந்தக் கருத்தை மட்டும் தான் தற்போது சாம்சங் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறினார்.

எத்தனை நோட் 7 திறன்பேசிகள் தயாரிக்கப்பட்டன ? எத்தனை வெடித்தன ?

சாம்சங் செவ்வாய்க்கிழமை அன்று இந்த திறன்பேசி தயாரிப்பை நிறுத்துவதாக அறிவிக்குமுன்வரை , எத்தனை கேலக்ஸி நோட் 7 திறன்பேசிகளை அது தயாரித்துள்ளது என்று செய்தியை இதுவரை வெளியிடவில்லை.

செப்டம்பர் 2 ம் தேதி, இந்த தென் கொரிய நிறுவனம் முதல் கட்டமாக 2.5 மில்லியன் சாதனங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தது.

செப்டம்பர் 27ம் தேதியன்று, தென் கொரியா மற்றும் அமெரிக்காவில் விற்கப்பட்டுள்ள கேலக்ஸி நோட் 7 திறன்பேசிகளில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவைக்கு பதிலாக, புதிய சாதனங்கள் தரப்பட்டுள்ளன என்று அது தெரிவித்தது.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த இரு நாடுகளில் தான் அதிக அளவில் கேலக்ஸி நோட் 7 திறன்பேசிகள் விற்பனை செய்யப்பட்டன. வெறும் சுமார் 50,000 சாதனங்கள் தான் ஐரோப்பாவில் விற்கப்பட்டன.

தென் கொரியாவில் , கடந்த வாரம், சிறிது நாட்கள் மட்டும் புதிய வாடிக்கையாளர்களுக்கு நோட் 7 விற்கப்பட்டது.

இவை எல்லாவற்றிலும் சேர்த்து, சுமார், நான்கு மில்லியன் போன்கள் விற்கப்பட்டதாக தோராயமாகக் கணக்கிடமுடிகிறது.

எல்லாம் திட்டமிட்டபடி நடந்திருந்தால், இந்த கால கட்டம் வரை , சாம்சங் சுமார் ஆறு மில்லியன் நோட் 7 திறன் பேசிகளைத் தயாரித்திருக்கும் என்று ஐ.எச்.எஸ்(IHS) கணித்திருந்தது. ஆனால் எத்தனை திறன்பேசிகள் அதிகமாக சூடாகின என்பது தெளிவாகவில்லை.

சாம்சங் முதல் முறையாக போன்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்த நேரத்தில், தன்னிடம் ''35 புகார்கள்'' வந்திருந்ததாகக் கூறியது. மற்றும், போன்களுக்கு மாற்றாக அளிக்கப்பட்ட சாதனங்களும் பாதிப்படைந்த ஏழு சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகியது.

படத்தின் காப்புரிமை Getty Images

இப்போது விற்கப்பட்ட கைபேசிகளுக்கு என்ன ஆகும் ?

சாம்சங் இந்த கேலெக்ஸி நோட் 7 போன்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ள ''எல்லா நடவடிக்கைகளையும்'' எடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

தற்போதைக்கு, பதிவு செய்த பயன்பாட்டாளர்களுக்கு ஈமெயில் அனுப்புவது மற்றும் அறிவிப்புகளை அனுப்புவது ஆகியவை இந்த ``நடவடிக்கைகளில்` அடங்கும்.

முதலில் போன்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாக கூறியபோது, சில பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் ஆவதைத் தடுக்கும் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் ஒன்றையும் சாம்சங் அளித்தது. பயனாளர்கள் தாங்கள் வாங்கிய போன்களை திரும்பத் தர மறுக்கும் பட்சத்தில் அந்த போன்களை முடக்குவது போன்ற மற்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என்ற யூகமும் நிலவியது.

இதில் இன்னொரு விஷயம் -- மலை போல திரும்பப் பெறப்பட்ட மொபைல்களை சாம்சங் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி.

இந்த போன்கள் முழுவதுமாக பிரிக்கப்பட்டு, அதில் உள்ள பொருட்கள் மற்ற புதிய கருவிகளில் பயன்படுத்தப்படுமா என்பது பற்றி பேச சாம்சங் நிறுவத்தின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.

ஆனால் ஒரு சுற்றுச்சூழல் குழு, இந்த விவகாரத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது.

படத்தின் காப்புரிமை Getty Images

மொபைல் போன்களில் மதிப்புமிக்க மற்றும் விலைமதிப்பான பொருட்கள் உள்ளன. இதற்காகத் தோண்டும் போது, அது சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்பை ஏற்படுத்தும். சில நேரங்களில், வளரும் நாடுகளில், மோசமான சூழல்களில் வேலைகள் நடக்கும்,'' என ப்ரென்ஸ் ஆஃப் தெ எர்த் ( Friends of the Earth) என்ற அமைப்பின் கொள்கை இயக்குநர் மைக் சைல்ட்ஸ் கூறியுள்ளார்.

எல்லா போன்களும் 100 சதவீதம் அதனுடைய முழுமையான பயன்பாட்டிற்கு பிறகும் அல்லது குறைபாடுகள் காரணமாக நிறுவனத்திடம் திரும்பத் தரப்படும்போது, மறுசுழற்சி செய்யப்பட வேண்டும்.,'' என்றார் அவர்.

மொபைல் நிறுவனங்களின் தவறுகளுக்காக, இந்தச் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடாது,'' என்றார் அவர்.

மொபைல் போனுடன் , உதிரிக்கருவிகளை வாங்கிவர்களுக்கு இழப்பீடு உண்டா ?

பல வாடிக்கையாளர்கள், இந்த நோட் 7 போனுக்காக, கவர்கள், ப்ளாக்பெரி பாணியிலான தட்டச்சுப்பலகை, வைட் ஆங்கிள் லென்ஸ் இணைப்பு மற்றும் எழுதும் கருவி மற்றும் பவர் பேக் போன்றவற்றை வாங்கியுள்ளனர்.

சாம்சங் செய்தித் தொடர்பாளர், இந்த செலவினங்களை எவ்வாறு ஈடுசெய்வது என விற்பனையாளர்களோடு பேசி வருவதாக கூறியுள்ளார்.

சிலர் இந்த போனை வாங்க முன்பதிவு செய்தபோது, அதோடு பெறப்பட்ட இரண்டாம் தலைமுறை கியர் மெய்நிகர் உலக ஹெட்செட்(second-generation Gear VR virtual reality headset) கருவியை கொடுத்தால், அதிக பணம் கொடுக்கப்படுமா என்றும் கேட்கிறார்கள்..

இதை தனியாக வாங்க 100 பவுண்ட்கள் செலவாகும்.

அந்த ஹெட்செட் கருவியை ஒரு "பரிசு" பொருளாக எண்ண சாம்சங் கருதியது, ஆனால் கூடுதல் இழப்பீடு கொடுக்கும் சாத்தியக்கூறை அது நிராகரிக்கவில்லை என செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அகற்றக்கூடிய பேட்டரிகளை சாம்சங் மீண்டும் அறிமுகப்படுத்துமா?

சாம்சங் கேலக்சி தயாரிப்புகளில், பயன்பாட்டாளர்கள் தங்களது போனின் பின் பகுதியை கழற்றவும் , பேட்டரியை மாற்றவும் வசதி செய்ததன் மூலம், அந்த போன்களை ஆப்பிள் ஐ போன்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்ள சாம்சங்கால் முடிந்தது..

ஆனால்,எஸ் 6 மற்றும் நோட் 5 போன்கள் இந்த நிலையை மாற்றி, மிகவும் கச்சிதமான வடிவமைப்புகள் மற்றும் தண்ணீரில் விழுந்தால் பாதிப்படையாத அம்சங்களை தர சாம்சங்குக்கு உதவின.

சிலர், சாம்சங் இதைச் செய்யாமல், இருந்திருந்தால், அது தற்போது சந்தித்துள்ள பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம் என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.

மேலும், உள்நாட்டு அளவில் அதன் போட்டி நிறுவனமான எல்.ஜி. கழற்றக் கூடிய பேட்டரிகள் உள்ள வசதியைத் தனது இரண்டு உயர் ரக போன்களில் சேர்த்துள்ளது.

இந்த சூழலில் , சாம்சங் அதன் எதிர்கால வடிவமைப்புகளைப் பற்றிய கருத்துக்களை வெளியிடவில்லை என்பதில் பெரிய ஆச்சரியமில்லை.

ஆனால் ஒரு நிபுணர், இந்த சம்பவம் காரணமாக, எல்லா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும், தங்கள் தயாரிப்புத் திட்டங்களை மீளாய்வு செய்து கொண்டிருப்பார்கள் என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பெரிய அளவிலான திரை, படங்களை மேலும் துல்லியமாகக் காட்டும் திரைகள், வேகமாகச் செயல்படுத்த பரோசெஸர்கள் மற்றும் 4ஜி தகவல் வசதி, ஆகியவற்றைக் கொண்டதாகவும், அதிக ஆற்றல் கொண்டதாகவும் நவீன ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்,''

என ஐ.எச்.எஸ். நிறுவனத்தைச் சேர்ந்த ஐயன் ஃபாக் கூறியுள்ளார். ''அவை ஒன்றுடன் ஒன்று போட்டிபோடும் கோரிக்கைகள்,'' என்றார் அவர்

''எல்லா கைத்தொலைபேசி நிறுவனங்களும் எதிர்வரும் தங்கள் ஸ்மார்ட்போன் அறிமுகங்களுக்காக காத்திருக்கின்றனர். தங்களது, பொறியியல் குழுக்களிடம், பேட்டரிகளை சார்ஜ் செய்வது மற்றும் பேட்டரிகள் வேலை செய்யும் விதம் குறித்து சோதனை செய்யுமாறும், சாம்சங் சந்தித்துள்ள பிரச்சனைகள் போன்ற எதுவும் ஏற்படாமல் இருக்க உறுதிசெய்யுமாறும் கூறியுள்ளனர், '' என்றார் அவர்.

மேலும், சாம்சங் தனது எதிர்வரும் போன்களை இந்த விவகாரத்தைக் குறிப்பாக கவனிப்பார்கள். ஏனென்றால் அந்த புதிய மாடல்களும், நோட்7 கொண்டுள்ள அம்சங்களில் சிலவற்றைக் கொண்டுள்ளதாக இருக்கும் என்ற சாத்தியம் உள்ளது, '' என்றும் அவர் தெரிவித்தார்.