அறிவியலுக்கான பேரணி: அரசியல் தலையீட்டிற்கு எதிராக உலகளவில் ஆர்ப்பாட்டங்கள்

அறிவியல்ரீதியான உண்மைகள் மீது உலக அளவில் அரசியல் தாக்குதல் இருப்பதாகக் கருதும் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், அதனை எதிர்த்து உலகெங்கிலும் நடைபெறும் ஆர்ப்பட்டங்களில் பங்கேற்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அறிவியலுக்காக முதன்முறையாக ஒரு பேரணி மேற்க்கொள்ளப்பட்டது, அதுவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் புவி தினத்தையொட்டி அது நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞானத்திற்கான கொண்டாட்டம் இது என்று கூறும் பேரணி ஏற்பாட்டாளர்கள், அறிவியல் சமூகத்தை பாதுகாக்கவும், ஆதரிக்கவும் விடுக்கப்படும் ஒரு அழைப்பு இது என்று கூறுகின்றனர்.

அமெரிக்கத் தலைநகரில் நடைபெற்ற இந்தப் பேரணி, அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிரானது இல்லை என்று கூறும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மாறாக, டிரம்பின் நிர்வாகம் இந்த இயக்கத்தை நடத்த ஒரு கிரியா ஊக்கியாக இருந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

படத்தின் காப்புரிமை EPA

வாஷிங்டன் டி.சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய கலிஃபோர்னியா அகாடமி ஆஃப் சயின்ஸின் நிர்வாக இயக்குனர், டாக்டர் ஜொனாதன் ஃபோலே, பகுத்தறிவுக்கு மாறான வகையிலான கேள்விகளுக்கு ஆராய்ச்சி உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரசியல்வாதிகளின் தாக்குதல்கள் "அடக்குமுறைக்கு ஒப்பானது". என்று குறிப்பிட்டார்.

"நமது ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அறிவியலை அவர்கள் குறிப்பாக இலக்கு வைக்கிறார்கள். நமக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து அறிவியல் தான் பாதுகாக்கிறது," என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை REUTERS

"சிலர் பாதிக்கப்படுவார்கள், சிலர் இறக்கக்கூட நேரிடும்," என்று சொல்கிறார் டாக்டர் ஃபோலே. காலநிலை மாற்றம், மாசுபாடு, மருந்து என, பல்வேறு விதங்களில் அறிவியலுக்கு ஆதரவு தெரிவிக்கும் பல்வேறு ஆண்களும் பெண்களும் சனிக்கிழமையன்று நடைபெற்ற பெண்களின் பேரணியால் உந்துதல் பெற்று, தங்கள் கவலைகளை ஓங்கி ஒலிக்கச் செய்ய ஒன்றிணைகிறார்கள்.

இந்த அறிவியலுக்கான பேரணியின் வியன்னா மற்றும் ஆஸ்ட்ரியா ஏற்பாட்டாளர்கள், அமெரிக்க வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் நுழைவதற்கு சிறிது காலத்திற்கு முன்னர், பேஸ்புக் மூலமாக தங்கள் இயக்கத்தில் மக்கள் இணைய ஊக்கப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

காலநிலை மாற்றத்தை புரளி என்று முன்னர் குறிப்பிட்டிருந்த டொனால்ட் டிரம்பின் கருத்துகள், மக்கள் விஞ்ஞான ஆதாரங்கள்கொண்ட உண்மைகளை சந்தேகிக்கத் தொடங்கிவிட்டதாக அறிவியல் சமூகத்தினரிடையே கவலைகளை எழுப்பியுள்ளன.

லண்டனில், விஞ்ஞானிகள் மற்றும் விஞ்ஞான ஆர்வலர்கள் கலந்து கொண்ட அணிவகுப்பு, விஞ்ஞான அருங்காட்சியகத்திலிருந்து பாராளுமன்ற சதுக்கம் வரை சென்றது.

தங்கள் ஆராய்ச்சியை இழிவுபடுத்தும் அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு "ஆபத்தான போக்கு" நிலவுவதாக ஆர்பாட்டத்தில் பங்கேற்ற பலர் கருதுகின்றனர்.

படத்தின் காப்புரிமை REUTERS

விஞ்ஞானிகளையும் அவர்களின் ஆராய்ச்சிகளையும் பொது மக்களுக்கு நெருக்கமாக கொண்டுவருவது தான், அறிவியலுக்கான இந்த பேரணியின் நோக்கமாகும்.

பொதுமக்களை தொடர்பு கொள்வது விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கும் என்றும், விஞ்ஞானிகளை அரசியல்வாதிகளாக மாற ஊக்குவித்து, அதன் மூலம் அவர்களின் குரலை பொதுத் தளத்தில் திறம்பட ஒலிக்கவைக்கமுடியும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.

அறிவியல்ரீதியான உண்மைகள் மீது உலக அளவில் அரசியல் தாக்குதல் இருப்பதாகக் கருதும் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், அதனை எதிர்த்து உலகெங்கிலும் நடைபெறும் ஆர்ப்பட்டங்களில் பங்கேற்றனர்.

பிபி்சி தமிழின் மேலும் சில அறிவியல் செய்திகள்:

மூளையில் தோன்றும் எண்ணங்களை கணினி மூலம் பகிர்ந்து கொள்ளும் ஃபேஸ்புக்கின் தொழில்நுட்பம்

மூளை ஆராய்ச்சியில் ஆச்சரியப்படுத்தும் புதிய கண்டுபிடிப்புகள்

"மூளை ஸ்கேன் மூலம் எதிர்காலக் குற்றவாளிகளை அடையாளம் காணலாம்"

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்