உலகில் எஞ்சியுள்ள ஒற்றை காண்டாமிருகம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலகில் எஞ்சியுள்ள ஒற்றை காண்டாமிருகம்

உலகில் எஞ்சியிருக்கும் ஒரே ஆப்ரிக்க வடக்கத்திய வெள்ளை இன ஆண் கண்டாமிருகம் கென்யாவில் இருக்கிறது. அதன் பெயர் சூடான்.

அதன் வயது 43. மனிதர்களின் வயது கணக்கில் சொல்வதானால் 100 வயது. ஆனாலும் அது உற்சாகமாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறது.

இந்த அபூர்வ காண்டாமிருக இனம் அழியாமலிருக்க எஞ்சியிருக்கும் கடைசி நம்பிக்கை இந்த ஒரே ஒரு ஒற்றை ஆண் காண்டாமிருகம் மட்டுமே.

ஒட்டுமொத்த உலகிலும் எஞ்சியுள்ள ஒரே ஒரு ஆப்ரிக்க வடக்கத்திய வெள்ளையின ஆண் காண்டாமிருகம் இது என்பதை பிபிசியிடம் வலியுறுத்திய ஓல் பெஜெடா வனவிலங்கு காப்பக தலைமை அதிகாரி ரிச்சர்ட் வினே, “இதை சிலர் (போர்க்களத்தில்) மிச்சமிருக்கும் ஒற்றை ஆண் என்று வேடிக்கையும் வேதனையுமாக குறிப்பிடுவார்கள்” என்கிறார்.

ஆப்ரிக்கக்காடுகளில் இயற்கைச்சூழலில் தனித்து வாழவல்ல ஒரே ஒரு வெள்ளை காண்டாமிருக இனம் இவை மட்டுமே. மற்றவையெல்லாம் வனக்காப்பகங்களில் மட்டுமே வாழவல்லவை.

ஆனால் இவற்றின் கொம்புகளுக்காக வேட்டைக்காரர்கள் இவற்றை ஏராளமாக கொன்று குவித்ததில், இந்த இனமே இன்று அழிந்துவிட்டது.

மொத்தம் மூன்று காண்டாமிருகங்கள் மட்டுமே இந்த இனத்தில் எஞ்சியுள்ளன. அதில் சூடான் மட்டுமே ஆண். மற்ற இரண்டும் பெண் காண்டாமிருகங்கள்.

இவற்றை பாதுகாக்கும் நோக்கத்துடன் சூடான் என்கிற ஆண் காண்டாமிருகமும் 2 பெண் காண்டாமிருகங்களும் 2009 ஆம் ஆண்டு கென்யா கொண்டுவரப்பட்டன.

இவைகள் இணைந்து குட்டிகள் போடுமென எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. அந்த இரண்டு பெண் காண்டாமிருகங்களால் இயற்கையாக கருத்தரிக்க முடியவில்லை.

எனவே தற்போது செயற்கை கருவூட்டல் முயற்சிகள் மூலம் இவற்றின் குட்டிகளை பிறப்பிக்க முயற்சிகள் நடக்கின்றன.

இதுவரை இப்படி ஒரு பரிசோதனை செய்யப்பட்டதே இல்லை. இதை செய்ய 10 ஆண்டுகள் பிடிக்கும் என்று கருதப்படுகிறது.

இதற்கு 90 லட்சம் முதல் ஒரு கோடி அமெரிக்க டாலர் வரை செலவாகலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

இதற்கான நிதியை திரட்டும் பணியை ஒல் பெஜெடா வனவிலங்கு காப்பகம் மேற்கொள்ளவிருக்கிறது.

அந்த நிதி கிடைத்து செயற்கை கருத்தரிப்பு மூலம் குட்டிகள் உருவாகும்வரை சூடானை பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் பராமரிப்பதில் அதிகபட்ச கவனம் செலுத்தப்படுகிறது.

அதனால் சூடானுக்கு 24-மணி நேர பாதுகாப்பும், பராமரிப்பும் அதிகபட்ச கவனிப்பும் அளிக்கப்பட்டுவருகிறது.