அடுப்பங்கரையில் முடங்கும் அறிவியல்?

  • 8 மே 2017

அறிவியல் துறையில் நுண்ணுயிரியில்(microbiology)பிரிவில் பெரும் சாதனையாளராக விரும்பியவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சசிதாரா(40).

நுண்ணுயிரியில் பிரிவில் பட்டப்படிப்பு முடித்து முனைவர் பட்டம் பெற, காட்டில் வளரும் காளான் வகையைக் குறைந்த செலவில் எளிய முறையில் வீடுகளில் பயிர்செய்வது பற்றி நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

ஆனால் திருமணம் மற்றும் குழந்தை வளர்ப்புக் காரணங்களால் சுமார் 12 ஆண்டுகள் அவர் அறிவியல் துறையை விட்டு , வீட்டு வேலைகளுக்காக தன்னை ஈடுபடுத்த வேண்டிய கட்டாயம்.

''அறிவியல் உலகத்தில் அன்றாடம் மற்றம் ஏற்படும். இத்தனை ஆண்டு காலத்திற்கு பிறகு, மீண்டும் வேலை கிடைப்பது ஒரு சவால். அங்கீகாரம் இல்லாதது போல் உணர்ந்தேன். சஞ்சிகைகளில் அறிவியல் கட்டுரைகளை எழுதிவருகிறேன்,'' என்று சசிதாரா கூறுகிறார்.

சசிதாராவைப் போல பல பெண்கள் அறிவியல் துறையில் துறையில் சாதிக்க மட்டுமல்லாது படிப்பை தொடரக் கூட குடும்பப் பொறுப்புகள் காரணம் என்று இந்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

சமீபத்தில் மாநிலங்களவைவில் நடந்த விவாதத்தில், விஞ்ஞானம், தொழில்நுட்ப மற்றும் புவியியல் அமைச்சுக்கான மாநில அமைச்சர் எஸ்.சௌத்ரி, இந்தியாவில் ஆராய்ச்சி துறையில் ஈடுபட்டுள்ள 1.93 லட்சம் நபர்களில், வெறும் 27,532 பேர்தான் பெண்கள், அதாவது 14.3 சதவீதம் மட்டுமே பெண்கள் என்று குறிப்பிட்டார்.

'பெண் ஆராய்ச்சியாளர்கள் குறைவதற்கு காரணம் என்ன?

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய மோகனா தன்னிடம் படித்த பல பெண் குழந்தைகள் அறிவியல் போட்டிகள் மற்றும் அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண், பரிசுகளை வென்றதாகவும், ஆனால் அவர்களில் யாரும் ஆராய்ச்சியாளராக இல்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்தார்.

''சில ஆண் குழந்தைகள் மேல் படிப்பை தொடர்ந்து, தற்போது ஒருவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், பலர் அரசு மற்றும் தனியார் ஆராய்ச்சி நிறுவங்களின் பணியில் உள்ளனர். ஆனால் பெண் குழந்தைகளை பொறுத்தவரை ஒரு சிலர் அறிவியல் ஆசிரியராக மட்டுமே உள்ளனர்,'' என்றார்.

இளம் சிறார்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முக்கிய உறுப்பினரும், அன்றாட அறிவியல் பற்றிய புத்தகங்களை வெளியிட்டுள்ள மோகனா, ''பல பெண் பிள்ளைகள் கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு அம்மா ஸ்தானம் பெறுகிறார்கள், அறிவியலில் கோட்டைவிட்டுவிடுகிறார்கள் என்பதை உணரும்போது சோகமாக உள்ளது,'' என்று தெரிவித்தார்.

இதையும் படிக்கலாம்:

இந்தியா ஏவிய தெற்காசிய நாடுகளுக்கான செயற்கைகோள்

ஃபிரான்ஸின் புதிய அதிபராகிறார் இம்மானுவல் மேக்ரன்

நீரிழிவு நோயை ஸ்மார்ட்ஃபோன் மூலம் கட்டுப்படுத்த முயலும் விஞ்ஞானிகள்

25 வயதிற்குள் கை நிறைய சம்பளம், திருமண வாழ்க்கை மற்றும் குழந்தைப் பேறு அடைய, கலை மற்றும் தொழில்நுட்ப துறை சார்ந்த பட்டப்படிப்புகள்தான் பெண்களுக்கு சிறந்தது என்று எண்ணும் மனநிலை சமூகத்தில் நிலவுகிறது என்கிறார் இந்தியாவின் முன்னணி இயற்பியலார்களில் ஒருவரான லட்சுமிகாந்தம்.

பெண் விஞ்ஞானிகள் திட்டத்தின் தலைவராக இருந்த இவர் பெண் குழந்தைகள் அறிவியல் பாடங்களை முக்கிய பாடங்களாக படிப்பதற்கு உத்வேகம் இல்லாதது ஒரு அவலநிலை என்கிறார் அவர்.

இந்திய அரசின் ரசாயன தொழில் நுட்ப நிறுவனத்தின் இயக்குனராக 2013-15 வரை ஆராய்ச்சியாளர் லட்சுமிகாந்தம் பணியாற்றினார். 1983ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் இயக்குனர் பதவியை வகித்த முதல் பெண் இவர்தான்.

படத்தின் காப்புரிமை YOUTUBE
Image caption இந்தியாவின் முன்னணி இயற்பியலாளர்களில் ஒருவரான லட்சுமிகாந்தம்

இந்தியாவின் அறிவியல் தொடர்பான 44 மத்திய பல்கலைக்கழங்கள் வெறும் நான்கு பல்கலைக்கழங்களில்தான் பெண்கள் துணை வேந்தர் பதவியில் உள்ளனர் என்கிறது அரசின் அறிக்கை.

குடும்ப பொறுப்பு யாருக்கு?

குடும்பப் பொறுப்புகள் என்று வரும்போது பெண்களுக்கு அவர்களின் தனித்திறனை இழந்துவிடும் அளவிற்கு அவர்களை தள்ளும் காரணிகள் என்ன என்று அறிய முதல் முறையாக பெண் ஆராய்ச்சியாளர்களின் படிப்பு,வேலை தொடர்பாக சமீபத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அந்த கணக்கெடுப்பை நடத்தியவர்களில் ஒருவர் பெங்களுருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ரோகிணி கோட்போல்.

பிபிசி தமிழிடம் பேசிய ரோகிணி ''திருமணம், குழந்தை பெற வேண்டிய கட்டாயம் மற்றும் வீட்டில் உள்ள வயதானவர்களை பார்த்துக்கொள்ளவேண்டிய நிலை ஆகியவை பெண்கள் அறிவியலில் இருந்து விலக பிரதான காரணங்கள் என்று தெரியவந்துள்ளது. அதே சமயம் ஆண் ஆரய்ச்சியாளர்கள் பணியில் இருந்து விலகுவதற்கு அவர்களின் மேல்படிப்பு, உடல்நல பிரச்சனை மற்றும் விருப்ப ஓய்வு போன்றவை காரணம் என்று அறியமுடிந்தது,'' என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''பல நேரங்களில் தலைமை ஆராய்ச்சியாளர்கள் மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பது அல்லது முனைவர் பட்டப் படிப்பிற்கு வழிகாட்டியாக இருப்பதற்கு தயங்குகின்றனர். பெண் ஆராய்ச்சியாளர்கள் முனைவர் பட்டம் பெற்றபிறகு, முழு நேர ஆராய்ச்சியாளராக இருக்கும் வாய்ப்பு குறைவு என்பதை காரணமாக கூறுபவர்களும் உண்டு,'' என்கிறார்.

சமூகத்தின் பொதுப் புத்தியில் பெண் படித்து வெளியில் வேலைக்கு போனாலும், வீட்டுவேலை செய்வது பெண்ணின் பொறுப்பு என்ற எண்ணம் உள்ளது. சட்டங்கள் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறினாலும், பெண் ஆணுக்கு சமம், குடும்பப் பொறுப்பில் இருவருக்கும் சமமான பங்கு உள்ளது என்ற அடிப்படை புரிதலை உணராதவரை பெரிய மற்றம் ஏற்படாது என்கிறார் ரோகிணி.

சமூக அறிவியல் மூலம் தீர்வு

படத்தின் காப்புரிமை Google
Image caption ஆராய்ச்சியாளர் ரோகிணி கோட்போல்

சமூக அறிவியல் மூலம் தீர்வு

பணியில் இருந்து விலகி சென்ற பெண் ஆராய்ச்சியாளர்களை பணிக்கு திரும்ப இந்திய அரசு பிரத்யேக திட்டங்களை வகுத்துள்ளது என்றும் அதில் குடும்ப காரணங்களுக்காக வேறு நகரங்களுக்கு மாறி செல்லும் கட்டாயம் ஏற்பட்டால், அந்த நகரத்தில் உள்ள அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியை தொடர பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்கிறார் திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஏ பி தாஸ்.

அவர், பெண் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசின் குழு உறுப்பினர் ஆவார்.

அரசு பல திட்டங்களை கொண்டு வரலாம், ஆனால், காளான் வளர்ப்பு ஆராய்ச்சியை தொடர தக்க சமயத்தை எதிர்நோக்கியுள்ள திருச்சி பெண் ஆராய்ச்சியாளர் சசிதாரவை போன்றவர்கள், மற்றும் ஆசிரியை மோகனா போன்றவர்களுக்கு தீர்வு, ஆண்-பெண் சமம் என்ற அறிவியல் உண்மையை சமூகம் உணர்ந்தால் மட்டுமே சாத்தியம் என்கிறார் தாஸ்.

தொடர்பான கட்டுரைகள்:

விண்ணையும் வசப்படுத்தும் இஸ்ரோ பெண் விஞ்ஞானிகள்

ஆண்கள் வீட்டுவேலை செய்யத் தயாராகிவிட்டார்களா?

திருமணம் முறிந்தால் மறுதுணை தேடுவது என் உரிமை: பெண்களின் மனநிலை மாற்றம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்