தானியங்கி கார் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஆப்பிள் நிறுவனம்

படத்தின் காப்புரிமை Getty Images

தானியங்கி கார் அமைப்புமுறை ஒன்றை மேம்படுத்தி வருவதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், இத்தொழில்நுட்ப உரிமம் பிற கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படுமா அல்லது சொந்தமாகவே வாகனங்களை தயாரிக்க முயற்சிக்குமா என்பது குறித்து உடனடியாகச் சொல்ல முடியாது என்று டிம் குக் சுட்டிக்காட்டியுள்ளார்.

ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்துடனான அவருடைய பேட்டியில், தானியங்கி கார் அமைப்புமுறை திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த விரிவான கருத்துக்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனம் அரசாங்கத்திடம் செய்துள்ள திட்டவிளக்கத்தில், தானியங்கி கார் அமைப்புமுறை திட்டம் குறித்து உறுதிப்படுத்தியிருந்தாலும், தற்போதுவரை பொதுவெளியில் தன்னுடைய திட்டங்களை குறித்து விவாதிப்பதை ஆப்பிள் நிறுவனம் தவிர்த்து வந்தது.

மேலும், கடந்தாண்டு கார்களை தயாரிக்கும் குழுவிற்கு தலைவராக மூத்த வன்பொருள் நிபுணரான பாப் மான்ஸ்ஃபீல்ட் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் தலைமை பொறுப்பில் மாற்றம் ஒன்றிற்கான விவரங்கள் கசிந்திருந்தன.

அதுமட்டுமின்றி, இணையத்தில் உள்ள வதந்தி செய்திகளை பரப்பும் தளங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் தானியங்கி வாகனம் என்ற பெயரில் டெஸ்ட் வாகனத்தின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தன.

''நாங்கள் தானியங்கி அமைப்புமுறைகளில் கவனம் செலுத்தி வருகிறோம். தானியங்கி அமைப்புமுறைகளின் தெளிவான ஒற்றை நோக்கமானது சுயமாக இயக்கப்படும் கார்களாகும். இன்ன பிறவும் இருக்கின்றன,'' என்று ப்ளூம்பெர்க்கிடம் குக் தெரிவித்துள்ளார்.

''இத்திட்டத்தை நாங்கள் செயற்கை நுண்ணறிவு திட்டங்களின் தாயாக பார்க்கிறோம்.

''செயற்கை நுண்ணறிவு திட்டங்களிலேயே இது மிகவும் கடினமான ஒன்றாகும்.

''எங்களை எவ்வளவு தூரம் அழைத்து செல்கிறது என்பதை நாம் பார்ப்போம். அது எங்களை எங்கே அழைத்து செல்லும் என்பதை ஒரு தயாரிப்பு நோக்கத்தில் நாங்கள் சொல்லவில்லை. ஆனால், அதன் முக்கிய தொழில்நுட்பத்தின் மிகவும் நேர்மையாக இருக்க விரும்புவதே எங்களுக்கு மிகவும் முக்கியமாகும்.''

செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள் மற்றும் பயணங்களை பகிர்வது போன்றவை அதிகரித்திருப்பதால் இதனை ஒரு வாய்ப்பாக கருதுகிறோம் என்கிறார் குக்.

கடந்தாண்டு சீனாவின் மிகவும் பிரபல டாக்ஸி சேவை நிறுவனமான டிடி சூஸிங் மீது 1 பில்லியன் டாலர்களை ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தானியங்கி கார்களில் ஒன்று அதிபர் டிரம்பிற்கு காட்டப்பட்டது.

சான் ஃபிரான்சிஸ்கோ, ஸ்காட்ஸ்டேல் மற்றும் அரிசோனாவில் தானியங்கி கார் அமைப்புமுறையின் சோதனை ஓட்டத்தை தொடங்க ஆப்பிள் உத்தேசித்திருக்கிறது.

எதிர்காலத்தில் லிஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து சுயமாக இயங்கும் கார்களை சோதிக்கும் திட்டங்கள் குறித்து ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்த வாரம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், ஜூலை மாதம் வெளியிட உள்ள ஏ8 எனப்படும் தனது புதிய காரின் முன்னோட்டம் பற்றி இப்போதிலிருந்தே ஆடி நிறுவனம் விளம்பரப்படுத்த ஆரம்பித்துள்ளது. அதில், ஆடி நிறுவனத்துக்கு சொந்தமான சில தானியங்கி அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

''இந்த போட்டியில் முன்னிலை பெறப்போவது யார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை,'' என்று ஆட்டோகார் நாளிதழின் மேலாண் ஆசிரியர் ஜிம் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள் :

'வகுப்பை கட் அடித்தால் எதிர்பாலினத்தவரின் கழிப்பறையை கழுவ வேண்டும்'

'பாவத்திற்கான வரி': இனி செளதியில் சிகரெட்டிற்கு இருமடங்கு விலை

பல ஆண்களின் உயிரைக் காப்பாற்ற விரைப் புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய மருந்து

ஆன்டிபயோட்டிக் மருந்துகளை எதிர்க்கும் கிருமிகளை அழிக்க ''மேஜிகல்' மருந்து

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்