புதன் கிரக புதிர்களை அவிழ்க்க ஏழாண்டு பயணிக்கும் விண்கலன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புதன் கிரக புதிர்களை அவிழ்க்க ஏழாண்டு பயணிக்கும் விண்கலன்

இருபது ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட பயணத்தை பூர்த்தி செய்ய ஏழு ஆண்டுகள் பயணித்தாக வேண்டும். புதன் கிரகத்துக்கான விண்கலன் அடுத்த ஆண்டு புறப்படும் என்று ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இரு விண்கலங்கள் ஒன்றாக எட்டு கோடி கிலோமீட்டர்கள் பயணிக்கும்.

ஆனால், 400 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலையில் அவை வெவ்வேறாக இறங்கி சோதனை செய்யும். நம் சூரிய மண்டலத்தின் மிகச்சிறிய கிரகம் புதன். சூரியனுக்கு மிக அருகிலுள்ள கிரகமும் இதுவே.

பழமையான எரிமலைகள், நெடிதுயர்ந்த பாறைகள், ஆழமான பெரும்பள்ளங்களுமான மேற்பரப்பைக்கொண்டிருக்கும் இந்த கிரகத்தில் மிகக்குறைந்த ஆய்வுகளே இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதை மாற்றியமகைப்போகிறது இந்த மிகப்பெரிய புதிய ஆய்வு.

புகழ்பெற்ற இத்தாலிய விஞ்ஞானியான பேபி கொழும்பின் பெயரிடப்பட்டுள்ள விண்கலம் இது.இதை உருவாக்க பத்தாண்டுகள் பிடித்தது. இந்த விண்கலனின் அருகில் செல்லும்போது தான் இதன் பிரம்மாண்டம் தெரிகிறது. அதிதீவிர சூழலைத்தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதன்கிரகத்தை அடைய சூரியனை நோக்கி பயணிக்க வேண்டும்.

Image caption இத்தாலிய விஞ்ஞானியான பேபி கொழும்பின் பெயரிடப்பட்டுள்ள விண்கலம் இது.

அதாவது கடுமையான கதிர்வீச்சு மற்றும் வெப்பத்தை எதிர்கொள்ளவேண்டும். புதன்கிரக மேற்பரப்பில் வெப்பம் நானூற்றைம்பது டிகிரி செல்ஷியஸ் வரை எட்டலாம். ஈயத்தையே உருகச்செய்யும் வெப்பம் அது. அடுத்த ஆண்டு இது விண்ணில் ஏவப்படும்.

“புதனை சென்றடைவது ஒரு நீண்ட பயணம். சூரியனை நெருங்கும்போது அதன் வெப்பத்தை சமாளிக்க வேண்டும். நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் குறித்த மேலதிக தகவல்களை நமக்கு வழங்கப்போகும் ஒரு புதிரான சிறிய உலகம் தான் புதன்கிரகம்”, என்கிறார் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த மார்க் மெக்கொக்ரியன்.

பெபி கொலம்போவின் பயணத்திற்கு ஏழு ஆண்டுகள் பிடிக்கும். அதாவது 2025இல் தான் அது புதன்கிரகத்தை சென்றடையும்.

அங்கு சென்றவுடன் அதன் எஞ்சின் விலகி, இரண்டு விண்கலங்கள் தனியாக பிரியும். இரண்டும் இணைந்து அரிய காட்சிகளை அனுப்பும்.

புதன்கிரகத்தின் தோற்றங்களை தெள்ளத்தெளிவாக பார்க்கமுடியும். புதன்கிரகத்தின் மையத்தில் என்ன இருக்கிறது என்ற மர்மத்தை தீர்க்க இது உதவும்.

இந்த திட்டத்துக்காக எக்ஸ் ரே கேமராக்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

“புதனிலிருந்து வரும் தகவல்களை இந்த பூமியில் பார்க்கப்போகும் முதல் மனிதர்கள் நாங்கள் தான்”, என்கிறார் இந்த திட்டத்தில் பணிபுரியும் விஞ்ஞானி எம்மா பன்ஸ்.

Image caption புதன் கிரகத்தில் மிகக்குறைந்த ஆய்வுகளே இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன

“புதனிலிருந்து வரும் எக்ஸ்ரே படங்கள் புதனின் மேற்பரப்பில் என்ன இருக்கிறது என்பதை காண்பிக்கப்போகிறது. நமது இதுநாள் வரையிலான புரிதலை அது மாற்றியமைக்கப்போகிறது”, என்கிறார் எம்மா.

மிக விரைவில் இந்த விண்கலம் தன் நீண்ட பயணத்துக்கு தயாராகிவிடும். நமக்கு முதல்கட்ட தகவல்கள் கிடைக்க சிறது காலம் பிடிக்கும். இதுவரை கண்டிராத காட்சிகளுக்கு நாம் காத்திருக்கத்தான் வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

தொடர்புடையச் செய்திகள் :

நட்சத்திரங்களை விட வெப்பமான கிரகம் கண்டுபிடிப்பு

சனிக்கிரக ஆய்வின் இறுதிக்கட்டத்தில் காசினி ஆய்வுக்கலன்

செவ்வாய் கிரகத்திலிருந்து வெளியேறிய காற்று மாயமானது எங்கே?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்