ரோமத்தை விட பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பி

மிக நுண்ணிய இந்த மின்கம்பிகள் சிலிகானால் ஆனவை
Image caption மிக நுண்ணிய இந்த மின்கம்பிகள் சிலிகானால் ஆனவை

மனித ரோமத்தை விட பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பிகளை உருவாக்குவதில் ஆஸ்திரேலியாவின் கணினி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.

கணினிகள் நாளுக்கு நாள் சிறிதாகிவருகிறன என்றாலும் அவற்றின் சக்தி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கணினியில் பயன்படுத்தப்படும் உட்கூறுகளும் சின்னதாகிக்கொண்டே வருகின்றன.

அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தாத, அதிக வெப்பத்தை வெளியிடாத, அதிகம் மின் விரயம் செய்யாத கணினி உட்பொருட்களை உருவாக்குவதென்பது ஆராசய்ச்சியாளர்களுக்கு சிக்கல் நிறைந்த விஷயமாகவே இருந்து வந்துள்ளது.

அந்த சிக்கலைத் தீர்ப்பதில் பெரியதொரு முன்னேற்றம் கண்டிருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

நான்கு அணுக்கள் மட்டுமே அகலமும் ஒரு அணு மட்டுமே உயரமும் கொண்ட நுண்ணிய மின் கம்பிகளை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இவை உலோகக் கம்பிகள் அல்ல, சிலிகானால் ஆனவை.

சிலிகான் அணுக்களுடன் பாஸ்பரஸ் அணுக்களை கலந்து இந்த நுண்கம்பி உருவாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யும்போது, கம்பியின் மின் கடத்தும் மையப்பகுதி பாதுகாக்கப்படும் அதே நேரம் கடத்தப்படும் மின்சாரம் அதிகம் விரயமும் ஆவதில்லை.

குவாண்டம் கணினிகள் என்று சொல்லப்படுகின்ற அதிவேகத் திறன் கொண்ட அடுத்த தலைமுறைகளைக் கணினிகளை உருவாக்குவதற்கு இந்த நுண்கம்பிகள் மிக அவசியமாகத் தேவைப்படும்.