"கருமுட்டை பரிசோதனை குழந்தையை பாதிக்காது"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 3 ஜூலை, 2012 - 17:00 ஜிஎம்டி

செயற்கைமுறை கருத்தரிப்பின்போது சினையுற்ற கருமுட்டை செல்லை பிரித்தெடுத்து பரிசோதிப்பதால், அந்த கருமுட்டையின் எஞ்சிய செல்களிலிருந்து பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பில்லை என்று ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

செயற்கை முறையில் குழந்தை உருவாகும்போது பிறக்கும் குழந்தைக்கு மரபணு வழியாக பரவும் நோய்கள் அல்லது குறைபாடுகள் இருந்தால் அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகள் நடத்தப்படுவது வாடிக்கை.

அதாவது செயற்கை முறையில் கருத்தரிக்கச்செய்யப்பட்ட கருமுட்டையானது, மூன்று நாட்கள் கழித்துப்பார்க்கும்போது ஒரு செல்லாக இருந்த நிலைமாறி மொத்தம் எட்டுசெல்களாக வளர்ந்திருக்கும்.

இந்த நிலையில், இதில் இருக்கும் எட்டு செல்களில் ஒரே ஒரு செல்லை மருத்துவர்கள் மிக கவனமாக பிரித்து எடுத்து, அந்த ஒரு செல்லை வைத்து அந்த குழந்தைக்கு மரபணு ரீதியில் பரவக்கூடிய நோய்கள் அல்லது குறைபாடுகள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து பார்ப்பார்கள். இந்த பரிசோதனைகளை ஆங்கிலத்தில் பிஜிடி பரிசோதனைகள் என்று மருத்துவர்கள் அழைப்பார்கள். இதன் மூலம் அந்த குறிப்பிட்ட குழந்தைக்கு வரக்கூடிய நூற்றுக்கும் அதிகமான மரபணு ரீதியிலான நோய்களை அவர்களால் கண்டறிய முடியும். அந்த கருவுக்கு மிக மோசமான மரபணுக்கோளாறுகளோ அல்லது நோய்களோ வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட பிறகே இந்த கருமுட்டையானது தாயின் கருப்பைக்குள் செயற்கையாக கொண்டு சென்று பதியப்படும்.

இந்த சோதனைகள் மூலம் பிறக்கக் கூடிய குழந்தைக்கு மரபணு கோளாறுகள் இல்லாமல் செய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் இந்த சோதனைகள் நன்மை பயக்கும் என்று மருத்துவர்கள் கருதினாலும், சினையுற்ற ஒரு கருமுட்டையின் ஒட்டுமொத்த அளவில் பன்னிரண்டரை சதவீதத்தை பிரித்து எடுப்பது அந்த குழந்தையின் எதிகால உடல்வளர்ச்சிக்கும் ஒட்டு மொத்த ஆரோக்கியத்துக்கும் எந்தவிதமான பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது என்று உறுதியாக சொல்லமுடியுமா என்கிற கேள்வி மருத்துவர்கள் மத்தியில் கவலைகளை தோற்றுவித்து வந்தது.

இந்த கேள்விக்கான பதிலைத்தேடி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இப்படியான சோதனைகளை கடந்து பிறந்த சுமார் ஆயிரம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பெல்ஜியத்தில் இருக்கும் ஆய்வாளர்கள் பரிசீலித்தனர். 1993 ஆம் ஆண்டுக்கும் 2008 ஆம் ஆண்டுக்கும் இடையில் பிறந்த இந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் உடல் வளர்ச்சியையும் பரிசீலித்த இந்த மருத்துவர்கள் சினைப்படுத்தப்பட்ட கருமுட்டையிலிருந்து மூன்றாவது நாள் ஒரு செல் அகற்றப்படுவதால் அந்த கருவிலிருந்து பிறக்கும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

இந்த ஆய்வின் முடிவுகள், செயற்கைமுறை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோர்களுக்கு, குறிப்பாக மார்பக புற்றுநோய் உள்ளீட்ட மரபணுரீதியில் அடுத்த தலைமுறைக்கு செல்லக்கூடிய நோய்களுக்கான மரபணுக்கூறுகளை கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு பெரும் நம்பிக்கையளிப்பதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அதேசமயம், செயற்கை கருத்தரிப்பு குறித்து ஏற்கெனவே நிலவும் தார்மீக ரீதீயிலான கவலைகள் மற்றும் விமர்சனங்களை இந்த ஆய்வின் முடிவுகள் மேலும் கூர்மைப்படுத்தக் கூடும் என்கிற கவலைகளும் இருக்கின்றன.

அதிக காபி கருத்தரிப்பை தடுக்கும்

இந்த ஆய்வு தவிர, செயற்கைமுறை கருத்தரிக்க விரும்பும் பெண்கள் புகை பிடிப்பதையும் அதிமாக காபி குடிப்பதையும், பதப்படுத்தப்பட்ட கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை உண்பதையும் கைவிடுவது அவர்களின் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் மற்றொரு புதிய ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. இந்த மூன்று பழக்கங்களும் பெண்களின் கருமுட்டைகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைப்பதாகவும், அதேபோல அவர்களின் கருத்தரிக்கும் தன்மையையும் இது குறைப்பதாகவும் இந்த ஆய்வின் முடிவு தெரிவித்திருக்கிறது.

இந்த ஆய்வின் முடிவுகள் செயற்கை முறையில் கருத்தரிக்க விரும்பும் பெண்களுக்கு மட்டுமல்ல, இயற்கையாகவே கருத்தரிக்க விரும்பும் பெண்களுக்கும் பொருந்தும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட டென்மார்க்கைச்சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். எனவே, கருத்தரிக்க விரும்பும் பெண்கள் புகை பிடிப்பதையும், அதிகமாக காபி குடிப்பதையும், பதப்படுத்தப்பட்ட கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளை உண்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.