பைலின் புயலில் பலியான பறவைகள்

ஆவணப்படம்
Image caption ஆவணப்படம்

கடந்த வாரம் இந்தியாவின் ஆந்திரா மற்றும் ஒதிஷா மாநில கடற்கரைகளை புரட்டிப்போட்ட பைலின் புயலில் ஆந்திராவின் ஸ்ரீகாகுலம் மாவட்டத்திலுள்ள தெலிநீலபுரம் பறவைகள் சரணாலயத்திற்கு வந்திருந்த நைஜீரிய நாரைகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் பலியாகியிருக்கின்றன.

இப்படி இறந்த பறவைகளில் பெரும்பாலானவை நாரை இனங்கள் என்றும், இவற்றில் பல சைபீரியா போன்ற தூரதேசங்களில் இருந்து இங்குவந்து முட்டையிட்டு குஞ்சுபொறிக்கும் பறவைகள் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மேலும் இந்த நாரைகள் தமது முட்டைகள் மற்றும் இளம் குஞ்சுகளைவிட்டு பிரியாதவை என்றும், அதனாலேயே, இந்த புயலின்போதும் இந்த தாய்ப்பறவைகள் அங்கிருந்து தப்பிச்செல்லாமல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த குறிப்பிட்ட தெலிநீலாபுரம் பறவைகள் சரணாலயம் குறித்தும், இங்கு வரும் பறவையினங்கள் மற்றும் அவற்றின் பழக்கவழக்கங்கள் குறித்தும் டாக்டர் சலீம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தின் பறவையியலாளர் டாக்டர் பாலசுபிரமணியன் அவர்கள் பிபிசி தமிழோசையிடம் விளக்கும்போது, நைஜீரியாவிலிருந்து வரும் இந்த பறவைகள் இந்திய கடற்கரையை நாடி வருவதற்கு முக்கிய காரணம் அவற்றுக்கான உணவு மற்றும் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்கு ஏதுவான சூழல் இந்திய கிழக்கு கடற்கறைப்பகுதியில் இருக்கிறது என்பது தான் என்கிறார்.

அதேசமயம், ஆண்டுதோறும், பல்லாயிரக்கணக்கான மைல்கள் பறந்து இந்த குறிப்பிட்ட பறவைகள், இந்த குறிப்பிட்ட இடங்களுக்கு, குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மட்டும் மீண்டும் மீண்டும் தவறாமல் வருவதற்கான முழுமையான காரணங்களில் பல காரணங்கள் இன்னமும் புரியாத புதிர்களாகவே நீடிக்கின்றன என்றும் கூறுகிறார் அவர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை