அமெரிக்க ஒலிம்பிக் குழுவுக்கு விருந்து நிகழ்ச்சியில் 1968ல் இடைநீக்கம் செய்யப்பட்ட கறுப்பின விளையாட்டு வீரர்கள்

Image caption 1968ல் கறுப்பின சக்தி வணக்கம் செலுத்தி ஒலிம்பிக் போட்டியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட டோமி ஸ்மித்

1968ம் ஆண்டில் ஒலிம்பிக் பதக்க மேடையிலிருந்து இன சமத்துவம் வேண்டி `கறுப்பின சக்தி வணக்க` சமிக்ஞைகளை வெளிப்படுத்தியதால் கடுமையான அவதூறுகளுக்குள்ளான, ஒலிம்பிக் பதக்கம் வென்ற இரண்டு ஆப்ரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள், தற்போதைய அமெரிக்க ஒலிம்பிக் குழுவினரை கௌரவிக்க நடத்தப்படும் விருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

டோமி ஸ்மித் மற்றும் ஜான் கார்லோஸ் ஆகிய இந்த இரு வீரர்கள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையும் சந்திப்பார்கள்.

மெக்ஸிகோ சிடியில் நடந்த அந்த ஒலிம்பிக் போட்டிகளில், 200 மீட்டர் ஓட்டப்ந்தயத்தில் ஸ்மித்தும், கார்லோஸும் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அவர் கறுப்பு கையுறைகள் அணந்த முஷ்டிகளை உயர்த்திக் காட்டிய காட்சி அமெரிக்காவில் இனத்துவ சமத்துவத்திற்கான போராட்டத்தின் ஒரு குறியீடாக உருவாகிவிட்டது.

ஆனால் அவர்கள் அப்படிச் செய்தது, அந்த காலகட்டத்தில், அவர்கள் அமெரிக்க ஒலிம்பிக் குழுவிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டு நாட்டுக்கு திரும்ப அனுப்பப்பட வழிவகுத்தது.

அவர்கள் செய்த அதே சமிக்ஞையை அமெரிக்காவில் சமீபத்தில் போலிஸ் துப்பாக்கிச்சூட்டால் கறுப்பினத்தவர் கொல்லப்பட்டதற்கு எதிராக விளையாட்டு வீரர்கள் சமீப வாரங்களில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போதும் தற்போதைய விளையாட்டு வீரர்கள் செய்து காட்டினர்.