இந்தூர் டெஸ்ட் போட்டி: விராட் கோலியின் இரட்டை சதத்தால் வலுவான நிலையில் இந்தியா

இந்தூரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாடிவரும் மூன்றாவதுடெஸ்ட் போட்டியில், தனது இரண்டாவது இரட்டை சதத்தை விராட் கோலி பெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption விராட் கோலி

இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. கான்பூர் மற்றும் கொல்கத்தா ஆகிய முதல் இரண்டு டெஸ்ட்களில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) இந்தூரில் தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி , முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணிக்கு, முரளி விஜய், காம்பீர் ஜோடி நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை. விஜய் 10 ரன்களிலும், காம்பீர் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்

பின்னர் களமிறங்கிய புஜாரா 41 ரன்கள் எடுத்தார். புஜாரா அட்டமிழந்த பின்னர், களமிறங்கிய ரஹானே, அணித்தலைவர் விராட் கோலியுடன் நிலைத்து நின்று விளையாட, இவர்களைப் பிரிக்க நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

சற்று முன்பு வரை மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 456 ரன்கள் எடுத்து மிகவும் வலுவான நிலையில் இந்திய அணி உள்ளது.

விராட் கோலி 363 பந்துகளில் 207 ரன்கள் பெற்றும், ரஹானே 342 பந்துகளில் 161 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இன்றைய இரட்டை சதத்தின் மூலம், டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை இரட்டை சதம் எடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்