2016-இல் விளையாட்டு உலகம் - சாதனைகளும், சர்ச்சைகளும்

கடந்த 2016-ஆம் ஆண்டில், விளையாட்டு உலகில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டன; புதிய வரலாறு நிகழ்த்தப்பட்டது; சாதனையாளர்கள் தங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர்; புதிய நம்பிக்கை நட்சத்திரங்கள் உருவாகியுள்ளனர். 2016-இல் நடந்த விளையாட்டு உலக சாதனைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த தொகுப்பை இங்கு காணலாம்.

ரியோ ஒலிம்பிக் மேலும் படிக்க: ரியோ ஒலிம்பிக்: ஒரு நுட்பமான அலசல்

படத்தின் காப்புரிமை Getty Images

டென்னிஸ் : புதிய நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்த அன்ஜெலீக் கெர்பர், வாவ்ரிங்கா

 • டென்னிஸ் போட்டிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய மற்றும் ஃபிரெஞ் ஓபன் பட்டங்களை ஜோகோவிச் வென்றார். விம்பிள்டன் பட்டத்தை பிரிட்டன் வீரர் ஆண்டி மர்ரீயும், அமெரிக்க ஓபன் பட்டத்தை ஸ்டேன் வாவ்ரிங்காவும் வென்றனர்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற ஸ்விட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா
 • மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ஜெர்மனியின் அன்ஜெலீக் கெர்பர் வென்றார்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2016-இல் இரண்டு கிராண்ட்ஸ்லாம்களை வென்ற அன்ஜெலீக் கெர்பர்
 • ஆனால், இதை விட அதிக கவனம் பெற்றது செரீனா வில்லியம்ஸ் வென்ற ஏழாவது விம்பிள்டன் பட்டம் தான். இதன் மூலம் 22-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜெர்மனி வீராங்கனை ஸ்டெபி கிராப்பின் சாதனையை செரீனா சமன் செய்தார்.
 • டிசம்பர் மாதத்தில், இரண்டு முறை விம்பிள்டன் சாம்பியனான பெட்ரா க்விடோவா, தனது வீட்டில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தார். இதனால் பெட்ரா அடுத்த மூன்று மாதங்களுக்கு டென்னிஸ் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் காப்புரிமை PA
Image caption கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்த பெட்ரா க்விடோவா

ஆஸ்திரேலியாவின் தடுமாற்றமும், இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகளின் ஆதிக்கமும் கலந்த 2016 கிரிக்கெட்

 • இந்தியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை தனது அதிரடியான ஆட்டம் மூலமாக, மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில், மிகவும் பரபரப்பான இறுதி நிமிடங்களில் மேற்கிந்திய வீரர் பிராத்வெயிட்டின் அதிரடியால் மேற்கிந்திய அணி கோப்பையை வென்றது.
Image caption மேற்கிந்திய வீரர் பிராத்வெயிட்டின் அதிரடி
 • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4 -0 என்று இந்திய அணி கைப்பற்றியது. மிகச் சிறப்பாக பங்களித்த இந்திய அணித்தலைவர் விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
படத்தின் காப்புரிமை Image copyrightREUTERS
Image caption இங்கிலாந்து அணியை 4-0 என்ற வென்ற இந்திய அணி
 • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இளம் வீரர் கருண் நாயர் முச்சதமடித்துள்ளார். இது அவரது மூன்றாவது டெஸ்ட் போட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் காப்புரிமை AP
Image caption முச்சதம் எடுத்த கருண் நாயர்
 • மேலும், ஜிம்பாப்வே, மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களையும் வென்ற இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பெற்றது.
 • கடந்த பல ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆஸ்திரேலியாவுக்கு, 2016 பல சரிவுகளை உண்டாக்கியது. இலங்கையில் நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியுற்ற ஆஸ்திரேலியா, அதன் பின்னர் தென்னாப்ரிக்காவுக்கு எதிராக தன் சொந்த மண்ணில் நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியுற்று, தொடந்து 5 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தது.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசிய கைல் அபோட்
 • டி20 மகளிர் ஆசிய கோப்பை இறுதியாட்டத்தில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்திய மகளிர் அணி வென்றது.
படத்தின் காப்புரிமை MITHALI RAJ FB PAGE
Image caption டி20 மகளிர் ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா

'டூர் தெ பிரான்ஸ்': மீன்டும் வென்றார் கிறிஸ் ஃபுரூம்

 • ஜுலை 2-ஆம் தேதியன்று, பிரான்ஸில் உள்ள நார்மண்டியில் உலகின் மிகப் பிரபலமான சைக்கிள் பந்தயமான ' 2016- டூர் தெ பிரான்ஸ்' துவங்கியது. உலகின் முன்னணி சைக்கிள் பந்தய வீரர்கள் இதில் பங்கேற்றனர்.
 • உலககெங்கும் உள்ள சைக்கிள் பந்தய ரசிகர்களின் விருப்பமான இந்த தொடரை பிரிட்டனின் கிறிஸ் ஃபுரூம் வென்றார். இது அவர் வென்ற மூன்றாவது 'டூர் தெ பிரான்ஸ்' பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
Image caption மீண்டும் பட்டம் வென்ற கிறிஸ் ஃபுரூம்

ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் முக்கிய மணித்துளிகள்

 • கடந்த ஆகஸ்ட் மாதம், பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் 16 நாட்கள் குறிப்பிடத்தக்க வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன.
 • 207 நாடுகளை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தடகள வீரர்கள், 31 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றனர். ரியோ போட்டிகளின் போது மொத்தம் 306 வகை பதக்கங்கள் வழங்கப்பட்டன.
 • 121 பதக்கங்களை பெற்று, பதக்கப் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஒலிம்பிக் போட்டியாக அமெரிக்கா முதலிடம் பெற்றது.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் அதிக மெடல்களை வென்ற மைக்கேல் பெல்ப்ஸ், உசைன் போல்ட் மற்றும் சிமோன் பைல்ஸ்

தனது சாதனையை தொடர்ந்த உசேன் போல்ட்

 • தனது இறுதி ஒலிம்பிக் போட்டியில், அனைத்து கால கட்டத்திலும் மிகச் சிறந்த தடகள வீரர் என்ற தனது சிறப்பை உறுதி செய்யும் விதமாக, மேலும் மூன்று தங்கப் பதக்கங்களை உசைன் போல்ட் வென்றார்.
 • ஒலிம்பிக்கில் "மூன்று - மூன்று" , அதாவது 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டம் என மூன்று போட்டிகளில், மூன்று முறை தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வென்று உசைன் போல்ட் அற்புத சாதனை படைத்தார்.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்ற சாக்ஷி மாலிக்

'இந்தியாவுக்கு இரண்டே பதக்கங்கள்'

 • 117 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அனுப்பிய இந்திய அணிக்கு பாட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து பெற்ற வெள்ளிப் பதக்கமும், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் பெற்ற வெண்கலப் பதக்கமும் தான் ஆறுதல் தர முடிந்தது.
படத்தின் காப்புரிமை EPA
Image caption இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்தது சிந்துவின் வெள்ளிப் பதக்கம்

விடைபெற்றார் சாதனை மன்னன் மைக்கேல் பெல்ப்ஸ்

 • ரியோ ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் ஐந்து தங்கப் பதக்கங்கள் வென்றார். ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது தனது 23-வது தங்கப்பதக்கத்தை வென்ற மைக்கேல் பெல்ப்ஸ், இத்துடன் தான் நீச்சல் விளையாட்டிலிருந்து ஒய்வு பெறப் போவதாக தெரிவித்தார்.

தடைகளை தகர்த்து சாதனைகள் நிகழ்த்தியபாராலிம்பிக் வீரர்/ வீராங்கனைகள்

Image caption மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள்
 • ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து, பிரேசிலின் ரியோ நகரில் நடந்த பாராலிம்பிக் போட்டிகள், தொடக்கம் முதலே பல பிரச்சனைகளை சந்தித்தது.
 • மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான நிதி வரவில் பற்றாக்குறை, மோசமான நுழைவுச் சீட்டு விற்பனை மற்றும் அரசின் ஆதரவோடு ஊக்க மருந்து பயன்படுத்திய ரஷ்யா அணிக்கு தடை ஆகிய பல பிரச்சனைகளை பாராலிம்பிக் போட்டிகள் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
 • பாராலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் டி-42 பிரிவில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு
 • 107 தங்கப்பதக்கங்கள் உள்பட மொத்தம் 239 பதக்கங்களை பெற்ற சீனா, பாராலிம்பிக் போட்டிகள் பதக்கப்பட்டியில் முதலிடத்தையும், 147 பதக்கங்களை பெற்ற பிரிட்டன் இரண்டாம் இடத்தையும் பெற்றன.

யூரோ 2016 இல் ஏற்பட்ட வன்முறையும், சப்பகோயென்ஸ் அணியை இழந்த சோகமும் நிரம்பியது 2016 கால்பந்து உலகம்

 • யூரோ 2016 கால்பந்து தொடரை போர்ச்சுக்கல் அணி வென்றது. இறுதியாட்டத்தில் 1-0 என்று பிரான்ஸ் அணியை வீழ்த்தி, போர்த்துக்கல் அணி யூரோ 2016 பட்டம் வென்றது.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption யூரோ 2016 பட்டம் வென்ற போர்த்துக்கல் அணி
 • பிரான்ஸில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான யூரோ 2016 கால்பந்து போட்டி ஆட்டத்தின் முன்னரும், பின்னரும் வன்முறைகள் நடைபெற்றன. ரஷ்ய அணியின் அதிகாரிகள் மற்றும் ரசிகர்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
 • யூரோ 2016 கால்பந்து போட்டி தொடரிலிருந்து இங்கிலாந்து வெளியேறிவிட்டதால், அதன் எதிரொலியாக, நான்கு ஆண்டுகள் இங்கிலாந்து கால்பந்து அணியின் மேலாளராக பொறுப்பிலிருந்த ராய் ஹட்ஜ்சன் பதவி விலகினார்.
 • ரியல் மேட்ரிட் கால்பந்து அணியின் பிரபல வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் பிற வீரர்கள் வரி செலுத்துவதை தவிர்க்கும் விதமாக மில்லியன் கணக்கான டாலர் வருவாயை வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமாக முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கிரிஸ்டியானோ ரொனால்டோ
 • கொலம்பியாவில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் பிரேசிலின் சப்பகோயென்ஸ் கால்பந்து அணியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உயிரிழந்தனர். இது கால்பந்து உலகில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. கோபா சூடமெரிக்கானா தொடரின் இறுதியாட்டத்தில் சப்பகோயென்ஸ் கால்பந்து அணி விளையாடுவதாக இருந்தது.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption தனது விருப்பமான கால்பந்து அணியை இழந்து விட்ட சோகத்தில் ஒரு சிறுமி

விளையாட்டு துளிகள்

 • இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பி.வி சிந்து, சாக்ஷி மாலிக், ஜிட்டு ராய் , திபா கர்மாகர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
 • ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி இறுதியாட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை இந்தியா 3:2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
படத்தின் காப்புரிமை HOCKEY INDIA
Image caption ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பை வென்ற இந்தியா
 • நவம்பர் மாதத்தில், இந்திய கிரிக்கெட் வீரரும், 2011 உலக கோப்பை தொடர் நாயகனுமான யுவராஜ்சிங் பாலிவுட் நடிகை ஹேசல் கீச்சை திருமணம் செய்து கொண்டார்.
படத்தின் காப்புரிமை BCCI TWITTER
 • ஆண்டின் இறுதியில், பிரபல அமெரிக்க சமூக வலைதளமான ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியனுடன் தனது திருமணம் நிச்சயமாகி விட்டதாக , ரெடிட் இணையதள பக்கத்திலேயே உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
படத்தின் காப்புரிமை REDDIT/ AP
 • கான்பூரில் தனது 500-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி, நியூஸிலாந்து அணியை 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.
படத்தின் காப்புரிமை KIRTISH BHATT
Image caption கான்பூர் டெஸ்ட் போட்டியின் ஸ்கோர் கார்ட்
 • ஐந்து ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்ற பிரிட்டன் சைக்கிள் பந்தய வீரரான பிராட்லீ விக்கின்ஸ் தான் சைக்கிள் பந்தயங்களில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.
Image caption ஓய்வுபெற்றார் பிராட்லீ விக்கின்ஸ்
 • இளையோர் ஹாக்கி உலகக் கோப்பையில் 2-ஆவது முறையாக இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இளையோர் ஹாக்கி உலக கோப்பை தொடரின் இறுதியாட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
படத்தின் காப்புரிமை Image copyrightFIH.COM
Image caption சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா

தொடர்புடைய தலைப்புகள்