கோலி, ஜாதவ் சதம்: இங்கிலாந்தை 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மகாராஷ்டிரா மாநிலம் பூனா நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுக்கள்வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சதமடித்த கோலி மற்றும் ஜாதவ் ஜோடி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் தொடரை கடந்த மாதத்தில் 4-0 என்று இந்தியா வென்றுள்ள சூழலில், இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடர் இன்று (ஞாயிற்றுக் கிழமை) தொடங்கியது.

பகல் இரவு ஆட்டமான இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ஆரம்பம் முதலே நன்கு அடித்தாடியது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 61 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார்.

அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் 78 ரன்களையும், பென் ஸ்டோக்ஸ் 40 பந்துகளில் 62 ரன்களும் எடுத்தனர். நிர்ணயிக்கபப்ட்ட 50 ஓவர்களில், 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு இங்கிலாந்து அணி 350 ரன்கள் எடுத்தது.

351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இந்திய அணி, தொடக்க அடக்கக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் கே. எல். ராகுல் ஆகியோரது விக்கெட்டுக்களை 24 ரன்களுக்குள் இழந்தது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ஷிகர் தவான்

நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் இடம்பெற்ற யுவராஜ் சிங் 15 ரன்களில் ஆட்டமிழக்க, முன்னாள் இந்திய கேப்டன் தோனி ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய கேதார் ஜாதவ், அணித் தலைவர் விராட் கோலியுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை இருவரும் விளாச ஆரம்பிக்க, இந்திய அணியின் ரன் விகிதம் வெகுவாக உயர்ந்தது. தனது 27-வது ஒருநாள் போட்டி சதத்தை எடுத்த விராட் கோலி 122 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

படத்தின் காப்புரிமை AP

இளம் ஆட்டக்காரரான கேதார் ஜாதவ் 65 பந்துகளில் சதமடித்தார். அவர் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர், பரபரப்பான இறுதி நிமிடங்களில் ஹர்திக் பாண்ட்யாவின் அபார ஆட்டத்தால் இந்தியா 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

48.1 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்த இந்தியா வெற்றி இலக்கை எட்டியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்