இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரை இந்தியா வென்றது

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 கிரிக்கெட் தொடரை இந்தியா வென்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் சுழற்பந்து வீச்சாளர் யஜுவேந்திர சஹால்

மூன்று போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் கடைசி ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்தியா 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் யஜுவேந்திர சஹால் சிறப்பாக பந்துவீசி 25 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகள் எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

முதலில் ஆடிய இந்திய அணி தமது 20 ஓவர்களில் 202 ஓட்டங்களை எடுத்தனர். அணியின் முன்னாள் தலைவர் தோனியும், சுரேஷ் ரெய்னாவும் அபாரமாக ஆடி இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

தோனி 56 ஓட்டங்களும் ரெயினா 63 ஓட்டங்களும் எடுத்தனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption யஜுவேந்திர சஹாலை பாராட்டும் யுவராஜ் சிங். இருவரும் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினர்

பின்னர் ஆடவந்த யுவராஜ் சிங் அதிரடியாக ஆடி 10 பந்துகளில் 27 ஓட்டங்களை எடுத்தார்.

இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களில் பில்லிங்ஸ் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தாலும், பின்னர் ஆடவந்த ஜோ ரூட் மற்றும் ஓவென் மார்கன் ஆகியோர் அணியை சிறிது தூக்கி நிறுத்தினர்.

எனினும் பின்னர் விக்கெட்டுகள் மளமளவென சரிய ஆரம்பித்தன. ரூட் மற்றும் ஓவென் ஆகியோருக்கு பிறகு ஆடவந்தவர்களில் இருவர் மட்டுமே ஓட்டங்களை எடுத்தனர், அதுவும் ஒற்றை இலக்கத்தில்.

இங்கிலாந்து அணியில் ஆறு பேர் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

பெங்களூரு ஆட்டத்தின் சிறந்த விளையாட்டு வீரராக தோனியும், ஆட்டநாயகனாக யஜுவேந்திர சஹாலும் அறிவிக்கப்பட்டனர்.

இத்தொடரின் சிறந்த வீரராக ஜஸ்ப்ரீத் பும்ராஹ்வும், தொடரின் நாயகனாக சஹாலும் தேர்தெடுக்கப்பட்டனர்.

இதன் மூலம் டெஸ்ட், 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் போட்டி மற்றும் டி 20 அனைத்து தொடர்களையும் இந்தியா வென்றுள்ளது.