ஐபிஎல்லில் விளையாடினால் பணத்தை அள்ளிச் செல்வார் பென் ஸ்டோக்ஸ்: யுவராஜ் சிங் கணிப்பு

'ஐபிஎல்'என்றழைக்கப்படும் இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி ஏலத்தில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரரும், ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றால், அவர் பல மில்லியன் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியுமென்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

Image caption 'ஐபிஎல்லில் விளையாடினால் பணத்தை அள்ளிச் செல்வார் பென் ஸ்டோக்ஸ்'

இந்தியாவின் பெங்களூரூ நகரில் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதியன்று துவங்குவதாக இருந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், 2017-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் மற்றும் தேர்வு குறித்து பிபிசியிடம் யுவராஜ் சிங் உரையாடினார்.

பென் ஸ்டோக்ஸின் ஏலத் தொகை குறித்த தனது கணிப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த யுவராஜ் சிங் , ''இரண்டு மில்லியன் பவுண்டாக (ஏறக்குறைய 17 கோடி ரூபாய்) இருக்கலாம் '' என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐபிஎல் தொடரில் இடம்பெறுகிறாரா பென் ஸ்டோக்ஸ்?

கடந்த 2015-ஆம் ஆண்டில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் 1.6 மில்லியன் பவுண்டு என்ற மிக அதிக அளவு தொகையை யுவராஜ் சிங் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி 20 போட்டி தொடரில் 25 வயதான பென் ஸ்டோக்ஸின் ஆட்டத்தை நன்கு உற்று நோக்கிய யுவராஜ் சிங், பென் ஸ்டோக்ஸின் தான் நன்கு ரசித்ததாக குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐபிஎல்லில் இங்கிலாந்து வீரர்களின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கும் யுவராஜ் சிங்

''பென் ஸ்டோக்ஸ் மற்றும் இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஆகிய இருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து சவால் விடும் வகையில் ஆடுவதை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன். இது போன்ற போட்டி மற்றும் சவால் விடும் பாங்கு கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது'' என்று யுவராஜ் சிங் தெரிவித்தார்.

''இங்கிலாந்து வீரர்களுக்கும், எங்களுக்கும் (இந்திய வீரர்கள்) எப்போதும் போட்டி மனப்பான்மையில் வேடிக்கையாக வெறுப்பூட்டும் அணுகுமுறை நிலவி வருகிறது. எனக்கும், பிளிண்டாஃப்புக்கும் இருந்த பழைய மோதல்களும் அவ்வாறு தான்'' என்று யுவராஜ் சிங் மேலும் தெரிவித்தார்.

2017-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், ஏப்ரல் மாதம் 5 முதல் மே 21 வரை நடைபெறவுள்ள சூழலில், மே மாதத்தில் எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடததால், இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் பெரும்பாலான பகுதியில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களால் பங்கேற்க முடியும்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முந்தைய ஐபிஎல் தொடரில் ஆடிய இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன்

இத்தகு முன்பு நடந்த பல ஐபிஎல் தொடர்களில் இங்கிலாந்து வீரர்கள் பெரும்பான்மையாக பங்கேற்காத நிலையில், நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் இங்கிலாந்து வீரர்களின் வருகையால் மேலும் புத்துணர்வு பெறலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்