டி 20 கிரிக்கெட்: 72 பந்துகளில் 300 ரன்கள் விளாசிய டெல்லி வீரர்

டெல்லியைச் சேர்ந்த மோஹித் அலாவத், டி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில், 72 பந்துகளில் 300 ஓட்டங்கள் விளாசி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Image caption 300 ஓட்டங்கள்...ஆனாலும், ஓயவில்லை...

அவர் சந்தித்த மொத்தம் 72 பந்துகளில் 39 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் அடித்து இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

பிரென்ட்ஸ் பிரிமியர் லீக் என்ற உள்ளூர் போட்டியில், மாவி11 என்ற அணியில் விளையாடிய விக்கெட் கீப்பரான 21 வயதான மோஹித், இந்தப் போட்டியில் அசத்தலாக ஆடியுள்ளதால், நாயகனாக பார்க்கப்படுகிறார்.

இந்த ஆட்டத்தில் 20 ஓவர்களில் 416 ஓட்டங்கள் எடுத்த மாவி11 அணி, வெற்றியும் பெற்றது.

கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து 300 ஓட்டங்கள் எடுத்த அவர், ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள மோஹித், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார்.

பந்துகளை அடித்து ஆடுவதையே தீவிரமாக விரும்புவதாக தெரிவித்துள்ள மோஹித், அதிரடி ஆட்டம் ஆடிய அன்றைய நாள் சாப்பிடாமல் இருந்த வேளையிலும், அவருடைய இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியதாக பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

அதிரடியாக பந்தை அடித்து ஆட விரும்புவதாலும், விக்கெட் கீப்பராக இருப்பதாலும், இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரும், நட்சத்திர வீரருமான எம்.எஸ்.தோனியை தன்னுடைய உந்து சக்தியாக மோஹித் தெரிவித்திருக்கிறார்.

எதிரணியின் பந்துகளை மோஹித் சிதறடித்து, அதிரடியாக துவம்சம் செய்த வேளையில், அவரை வீழ்த்துவதற்கு எதிரணியினர் செய்த உத்திகள் எதுவும் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை.

இதற்கு முன்னதாக, டெல்லி ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் அணியில் இடம் பெற்றாலும், ஆட்டங்களில் பெரிதாக சோபிக்க தவறியதால், அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

முதல்தர கிரிக்கெட் போட்டியில் நான் நன்றாக சோபிக்கவில்லை என்று ஒப்புகொள்ளும் மோஹித், டெல்லி அணியில் மீண்டும் சேர விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.

ஒரு போட்டியில் மட்டுமே அதிரடியாக ஓட்டங்கள் குவித்திருப்பதால் அல்ல, கூடிய விரைவில் மோஹித் கிரிக்கெட் விளையாட்டு உலகில் பெரியதொரு வீரராக வளர்வார் என்று நம்புவதாக அவருடைய பயிற்சியாளர் சஞ்சாய் பரத்வாஜ் பிபிசியிடம் கூறியிருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்