சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: 'வாழ்வா-சாவா' போட்டியில் எப்படி சாதித்தது இந்தியா?

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில், ஞாயிற்றுக்கிழமையன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, இத்தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

வென்றே ஆக வேண்டும் என்ற சூழலில், தென் ஆப்ரிக்காவை மிக எளிதாக இந்தியா வென்றது எப்படி என்று இந்த அலசல் விவரிக்கிறது.

  • நேர்த்தியான மற்றும் சிக்கனமான பந்துவீச்சு

இலங்கை அணிக்கு எதிராக நடந்த முந்தைய போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது இந்திய அணியின் பந்துவீச்சுதான்.

ஆனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு பிரதான காரணமே பந்துவீச்சுதான்.

முதல் விக்கெட்டுக்கு தென் ஆப்ரிக்கா 76 ரன்களை சேர்த்த போதிலும், மிகவும் நேர்த்தியாக இந்திய அணியினர் பந்துவீசினர். பின்னர், தென் ஆப்ரிக்க விக்கெட்டுக்கள் சரியத் தொடங்கியவுடன், இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான 'லைன் அண்ட் லென்த்' பந்துவீச்சை தென் ஆப்ரிக்காவால் சமாளிக்க முடியவில்லை.

இந்திய தரப்பில், புவனேஸ்வர் குமார் மற்றும் பூம்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பூம்ரா
  • களத்தில் 'பாயும் புலிகளாக' அசத்திய இந்திய பீஃல்டர்கள்

நிச்சயமாக வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கிய இந்திய அணியினர், இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பீல்டிங் செய்தனர்.

சொற்ப ரன்களிலேயே தென் ஆப்ரிக்க கேப்டன் ஏ பி டிவில்லியர்ஸ் ரன் அவுட்டாக, அது தென் ஆப்ரிக்காவின் வீழ்ச்சியின் தொடக்கமாக அமைந்தது.

மூன்று தென் ஆப்ரிக்க வீரர்களை இந்திய அணி ரன் அவுட் செய்ததால் தென் ஆப்ரிக்க அணியின் ரன் குவிப்பு மிகவும் பாதிக்கப்பட்டது. இறுதியில், அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ரன்களை மட்டுமே தென் ஆப்பிரிக்கா பெற்றது.

படத்தின் காப்புரிமை BCCI
Image caption சிறப்பான பீல்டிங்கால் இந்திய அணி வெற்றி
  • என்ன ஆயிற்று தென் ஆப்ரிக்க மட்டைவீச்சாளர்களுக்கு?

17.2 ஓவர்களில் 76 ரன்களை குவித்து விக்கெட் இழப்பின்றி வலுவான நிலையில் இருந்த தென் ஆப்ரிக்கா, 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ரன்களை மட்டுமே பெற்றது.

தொடர்ந்து விக்கெட்டுக்கள் விழுந்து கொண்டே இருந்ததால், தென் ஆப்ரிக்காவால் விரைவாக ரன் எடுக்க முடியவில்லை. இதனால் தொடக்க ஆட்டக்காரர்கள் ஏற்படுத்திய நல்ல தொடக்கம் வீணானது.

ஏ பி டிவில்லியர்ஸ், மில்லர் போன்ற பல தென் ஆப்ரிக்க மட்டைவீச்சாளர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
  • உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான், கோலி

தனது பேட்டிங்கில் இந்திய அணி ரோகித் சர்மாவை தொடக்கத்திலேயே இழந்த போதிலும், ரோகித் சர்மா ஆட்டமிழந்தவுடன் களத்தில் இறங்கிய அணித்தலைவர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து ஷிகர் தவான் இந்திய அணி வெற்றி பெறுவதையும், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவதையும் உறுதி செய்தார்.

இலங்கைக்கு எதிராக நடந்த கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சதமடித்த ஷிகர் தவான், இந்த போட்டியில் 83 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 78 ரன்கள் எடுத்தார்.

தவான் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் விளையாடி வந்த இந்திய அணித்தலைவர் விராட் கோலி சிறப்பாக விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்தார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான், கோலி
  • முக்கிய போட்டிகளில் தொடர்ந்து தடுமாறும் தென் ஆப்ரிக்கா

கடந்த 1992, 1996, 1999, 2015 என பல உலககோப்பை போட்டிகளில் காலிறுதி, அரையிறுதி போன்ற முக்கிய போட்டிகளில், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் விளையாடிய தென் ஆப்ரிக்கா தோல்வியையே சந்தித்துள்ளது.

முக்கிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்தில் தொடந்து கோட்டை விட்டு வருவதாக அந்த அணியின் மீது பரவலான குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது.

அதே போல், இந்தியாவுக்கு எதிரான இப்போட்டியில் இந்த அழுத்தமே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று கூறலாம்.

தொடர்பான செய்திகள்:

சாம்பியன்ஸ் டிராஃபி: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி

பாகிஸ்தானை 124 ரன்களில் வீழ்த்தி இந்தியா அமோக வெற்றி

இந்தியா - பாக்., கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு காரணமான 5 முக்கிய திருப்புமுனைகள்

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: இலங்கையிடம் இந்தியா தோற்றது எதனால்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்