தென் ஆஃப்ரிக்காவில் இதுவரை இந்தியா சாதித்ததா? - புள்ளிவிவர பார்வை

இம்ரான் தாஹீர் மற்றும் டிவில்லியர்ஸ் படத்தின் காப்புரிமை Clive Rose

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆஃப்ரிக்காவில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள், ஆறு ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுனில் தொடங்குகிறது. விராட் கோலி தலைமையில் இந்திய அணியும் டு பிளசிஸ் தலைமையில் தென் ஆஃப்ரிக்காவும் போட்டியை எதிர்கொள்கின்றன. தென் ஆஃப்ரிக்காவுக்கு இதுவரை இந்திய கிரிக்கெட் அணி மேற்கொண்ட சுற்றுப்பயணங்கள் மற்றும் அதில் கிடைத்த முடிவுகள் குறித்த தொகுப்பு இது.

டெஸ்ட் கிரிக்கெட்

இதுவரை தென் ஆஃப்ரிக்காவில் ஆறு டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. 1992/93-இல் முதன்முறையாக தென் ஆஃப்ரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. கடைசியாக 2013/14 காலகட்டத்தில் அங்கே இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியது.

படத்தின் காப்புரிமை Shaun Botterill

1992/93-இல் நடந்த டெஸ்ட் தொடரில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை இழந்தது. இதுவரை தென் ஆஃப்ரிக்காவில் இந்திய அணி விளையாடிய ஆறு டெஸ்ட் தொடர்களில் ஐந்தில் தென் ஆஃ ப்ரிக்கா வென்றது. ஒரு தொடர் டிரா ஆனது. 2010-11 தொடரில் தோனி தலைமையில் சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என டிரா செய்தது.

ஆண்டு மொத்த டெஸ்ட் போட்டிகள் இந்தியா வெற்றி தென் ஆப்ரிக்கா வெற்றி
1992-93 4 0 1
1996-97 3 0 2
2001-02 2 0 1
2006-07 3 1 2
2010-11 3 1 1
2013-14 2 0 1

தென் ஆஃப்ரிக்க மண்ணில் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. எட்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. ஏழு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

தென் ஆஃப்ரிக்க மண்ணில் ஒரு இன்னிங்சில் இந்திய அணி குவித்த அதிகபட்ச ரன்கள் 459. இந்திய அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் தென் ஆஃப்ரிக்க அணி குவித்த அதிகபட்ச ரன்கள் 620/4 . இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே டெஸ்ட் போட்டியில் நடந்தன. 2010 -ஆம் ஆண்டில் சென்சூரியனில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆஃப்ரிக்கா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

தென் ஆஃப்ரிக்காவில் இந்திய அணி ஒரு இன்னிங்சில் எடுத்த குறைந்தபட்ச ரன்கள் 66. இந்த டெஸ்ட் போட்டி டர்பனில் 1996-ஆம் ஆண்டு நடந்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 100 ரன்களுக்கும் இரண்டாவது இன்னிங்சில் 66 ரன்களுக்கும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் 328 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆஃப்ரிக்கா வென்றது.

படத்தின் காப்புரிமை Paul Kane

2014-15 ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னர் இந்திய அணி இதுவரை எந்த டெஸ்ட் தொடரையும் இழந்ததில்லை. கடைசியாக விளையாடிய 10 டெஸ்ட் தொடர்களில் ஒன்பது டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக வென்றுள்ளது இந்திய அணி. அதே சமயம் இதுவரை இந்திய அணி தென் ஆஃப்ரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றதே கிடையாது என்பதே வரலாறு.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாறு படைக்குமா அல்லது மீண்டும் தென் ஆஃப்ரிக்காவே ஆதிக்கம் செலுத்துமா என்பதற்கான பதில் ஜனவரி 28-க்குள் தெரிந்துவிடும்.

ஒருநாள் போட்டிகள்

1992/93- இல் இந்தியா தென் ஆஃப்ரிக்காவில் ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதில் ஐந்து போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டு போட்டிகளில் தென் ஆஃப்ரிக்கா தோல்வி அடைந்தது.

1996/97- இல் இந்தியா, ஜிம்பாப்வே, தென் ஆஃப்ரிக்கா இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் தென் ஆஃப்ரிக்காவில் நடந்தது. இதில் இந்தியாவும் தென் ஆஃ ப்ரிக்காவும் ஐந்து போட்டிகளில் மோதின. ஒரு போட்டி மழையால் முடிவு கிடைக்காமல் போனது. இறுதிப் போட்டி உட்பட நான்கிலும் தென் ஆஃப்ரிக்காவே வென்றது.

2001-ல் இந்தியா, கென்யா ஆகிய அணிகள் தென் ஆஃப்ரிக்காவில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடின. இதில் நான்கு முறை இந்தியாவும் தென் ஆஃ ப்ரிக்காவும் மோதின. இறுதிப் போட்டி உட்பட மூன்று போட்டிகளில் தென் ஆஃப்ரிக்கா வெற்றி பெற்றது. ஒன்றில் இந்தியா ஜெயித்தது.

2006-இல் மீண்டும் இந்திய அணி தென் ஆஃப்ரிக்காவை அதன் சொந்த மண்ணில் சந்தித்தது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் தென் ஆஃப்ரிக்கா மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்தியா 91 ரன்களுக்கு ஒரு போட்டியில் ஆட்டமிழந்தது. மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் முறையே 168, 163, 200 ரன்களையே குவித்தது.

படத்தின் காப்புரிமை GLYN KIRK

2011-இல் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்ரிக்காவில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளில் வென்று தென் ஆஃப்ரிக்கா தொடரை வென்றது. இந்த தொடரில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது, மூன்றாவது ஒருநாள் போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

கடைசியாக 2013-இல் இந்திய அணி தென் ஆஃப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.

தென் ஆஃப்ரிக்க மண்ணில் இதுவரை இந்திய அணி ஒரு நாள் கோப்பையை வென்றதே இல்லை.

டி20 போட்டிகள்

2006, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் ஒரே ஒரு டி20 போட்டி கொண்ட டி20 தொடர் நடந்தது. இதில் இரண்டு முறை இந்திய அணியும் ஒரு முறை தென் ஆஃப்ரிக்க அணியும் கோப்பையை வென்றன.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :