லண்டன் ஒலிம்பிக்: ராம் சிங் யாதவ் தகுதி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 ஜனவரி, 2012 - 14:29 ஜிஎம்டி
ராம் சிங் யாதவ்

மும்பை மராத்தனில் வெற்றி பெற்ற ராம் சிங் யாதவ்

இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுகளில் மராத்தான் போட்டிகளில் பங்குபெற இந்தியாவின் ராம் சிங் யாதவ் தகுதி பெற்றுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற ஸ்டாண்டர்ட் சார்டர்ட் மராத்தான் போட்டியில் அவர் இரண்டு மணி பதினாறு நிமிடங்கள் ஐம்பத்து ஒன்பது விநாடிகளில் ஓடி லண்டன் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் 1976 ஆம் ஆண்டு, மோண்ட்ரியல் ஒலிம்பிக் விளையாட்டுகளில் இதே போட்டியில் ஓடிய ஷிவ்நாத் சிங் இரண்டு மணி பதினாறு நிமிடங்கள் இருபத்து இரண்டு விநாடிகளில் ஓடியிருந்தார்.

ஷிவ்நாத் சிங்கின் சாதனையான இரண்டு மணி பனிரெண்டு நிமிடங்களை விட குறைவான நேரத்தில் ஓடுவதே தனது லட்சியம் என்று யாதவ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் தனது பயிற்சிகளை ராம் சிங் யாதவ் மேற்கொண்டு வந்தார்.

இருந்தாலும் எத்தியோப்பியா, கென்யா, உகாண்டா, தான்சானியா போன்ற கிழக்கு ஆப்பிரிக்க நாட்டு வீரர்களுடன் சர்வதேசப் போட்டிகளில் ஓடும் போது எந்த அளவுக்கு இந்திய வீரர்களால் வெற்றி பெற முடியும் என்கிற கேள்விக் குறியும் உள்ளது.

எனினும் ராம் சிங் யாதவ் தொடர்ந்து இதே திறமையை தக்க வைத்து மேலும் கூடுதலாக பயிற்சிகளை அறிவியல் ரீதியில் முன்னெடுத்தால் லண்டன் ஒலிம்பிக்ஸில் அவருக்கு பதக்கம் பெறும் வாய்ப்புகள் இருக்கக் கூடும் என்று தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நீண்ட தூர ஓட்டத்தில் தங்கம் வென்றவரான தமிழகத்தைச் சேர்ந்த சங்கர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தனது சொந்த ஊரான குன்னூரில் யாதவின் பயிற்சிகளை அருகில் இருந்து தான் பார்த்துள்ளதாகவும், அவரிடம் பதக்கம் பெறும் திறமை இருப்பதாகவும் சங்கர் கூறுகிறார்.

இந்தியாவில் விளையாட்டு பயிற்சிகளில் அறிவியல்பூர்வமான அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதிலும் மேலும் பல முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன எனவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு வடஆப்பிரிக்க நாடான மொராக்கோ போன்ற நாடுகளில் நீண்ட தூரம் ஓடும் வீரர்கள் பயிற்சி பெறும் காலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அவர்களது பயிற்சி அறிவியல் ரீதியாக வரைபடங்களுடன் மருத்துவர்களுடன் அலசப்பட்டு வீரர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுவதை தான் அவர்களுடன் அந்த நாடுகளில் பயிற்சி பெற்ற போது கவனித்துள்ளதாகவும் சங்கர் சுட்டிக்காட்டுகிறார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.