லண்டன் ஒலிம்பிக்ஸ்: இந்திய பெண் மல்யுத்த வீரர் தகுதி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 ஏப்ரல், 2012 - 16:31 ஜிஎம்டி

கீதா சிங்( நீல வண்ண உடையில்) கடந்த காமன்வெல்த் போட்டியில்

இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுகளில், மகளிருக்கான மல்யுத்தப் போட்டியில் பங்கு பெற முதல் முறையாக இந்தியாவிலிருந்து ஒரு வீராங்கனை தகுதி பெற்றுள்ளார்.

கஸாகஸ்தான் நாட்டில் இடம்பெற்ற ஆசியத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் கீதா சிங் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் லண்டன் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார்.

மகளிருக்கான 55 கிலோ எடைப் பிரிவில் அவர் கொரியாவின் ஜீ இயுன் உம்மை 5-0 என்கிற கணக்கில் அவர் வென்றதன் மூலம் லண்டன் ஒலிம்பிஸுக்கான வாய்ப்பு அவருக்கு கிட்டியுள்ளது.

ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளில் மகளிருக்கான மல்யுத்தப் போட்டிகள் முதல் முறையாக 2004 ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டுத் தலைநகர் ஏதன்ஸில் நடைபெற்ற போட்டிகளில் இடம்பெற்றது.

கீதாவைத் தவிர, இந்தியாவிலிருந்து ஆடவர் பிரிவில் 55 கிலோ எடைப் பிரிவில் பங்கு பெற்ற அமித் குமார் மற்றும் 60 கிலோ எடைப் பிரிவில் பங்கு பெற்ற யோகேஸ்வர் தத் ஆகியொரும் தகுதி பெற்றுள்ளனர்.

ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சுசில் குமார் 66 கிலோ எடைப்பிரிவில் தகுதி பெறவில்லை.

கீதா சிங் லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், அவர் தங்கப் பதக்கத்தை வெல்வது மட்டுமே தனக்கு திருப்தி அளிக்கும் என்று அவரது தந்தையும் பயிற்சியாளருமான மகாவீர் சிங் போகாட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

லண்டன் ஒலிம்பிக்ஸில் மல்யுத்தப் போட்டிகளில் பங்குபெற இந்திய வீரர்கள் தகுதி பெற இன்னும் இரு வாய்ப்புகள் உள்ளன. சீனாவில் இம்மாத இறுதியிலும், ஃபின்லாந்தில் அடுத்த மாதம் முதல் வாரத்திலும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.