ஒலிம்பிக் ஹாக்கி: பாகிஸ்தான் படுதோல்வி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 ஆகஸ்ட், 2012 - 13:32 ஜிஎம்டி

அதிரடி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள்

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவருக்கான ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி இதுவரை இல்லாத வகையில் மிகவும் மோசமான ஒரு தோல்வியை இன்று காலை அடைந்தது. ஏ பிரிவில் இடம்பெற்ற கடைசி தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை 7-0 என்கிற கோல் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. முதல் பகுதியின் நான்காவது நிமிடத்திலேயே ஆஸி அணியின் லியாம் யங் முதல் கோலை அடிக்க ஆஸியின் பிடிக்கு ஆட்டம் செல்ல வழி வகுத்தது. அடுத்த நிமிடத்திலேயே மார்க் நவுல்ஸ் ஒரு கோல் போட, முதல் ஐந்து நிமிடங்களிலேயே 2-0 என்கிற முன்னிலையை ஆஸ்திரேலியா பெற்றது.

"அணியில் ஒரே ஒரு கோல் கீப்பர் என்பது தோல்விக்கு முக்கிய காரணம்"

இஸ்லாஹுதின் சித்திக்கி

இதையடுத்து எதிர் தாக்குதலை நடத்த பாகிஸ்தான் அணி எடுத்த முயற்சிகளை ஆஸ்திரேலியா முறியடித்தது. தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தாக்குதலை சமாளிக்கவே திணறிய பாகிஸ்தான் அணியால் எதிர்தாக்குதலை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.

சர்வதேச அளவில் பாகிஸ்தான் ஹாக்கி அணி அடைந்துள்ள மிக மோசமான தோல்விகளில் இதுவும் ஒன்று என கூறப்படுகிறது.

இதனிடையே பதக்கப்பட்டியிலின் முதலிடத்தில் இருக்கும் சீனாவுக்கு தடகளத்தில் இன்று ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டது.

இந்த ஒலிம்பிக் போட்டிக்கு வந்துள்ள பாகிஸ்தான் அணியில் ஒரு கோல்கீப்பரே இருக்கிறார் என்பது அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் என்று பாகிஸ்தன் அணியின் முன்னாள் தலைவரும், பயிற்சியாளருமான இஸ்லாஹுதின் சித்திக்கி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியிடம் புரிந்துணர்வும் ஒருங்கிணைப்பு முற்றாக இல்லாத சூழலும், உடல் வலுவும் தாக்குபிடிக்கும் அளவுக்கு இல்லாததுமே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம் எனவும் இஸ்லாஹுதின் சுட்டிக்காட்டுகிறார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.