தடகள சம்மேளன தேர்தல் செல்லாது: இந்திய விளையாட்டு அமைச்சு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 டிசம்பர், 2012 - 14:32 ஜிஎம்டி
இந்திய தடகள சம்மேளன சின்னம்

இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் மற்றும் கருவூலர் பதவிகளுக்கு நடத்தப்பட்டிருந்த தேர்தல்கள் செல்லாது என்று இந்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

தடகள சம்மேளனத்தின் செயற்குழுவில் அங்கம் வகிக்கும் ஒருவரே தலைவர் பதவிக்கும் செயலாளர் பதவிக்கும் போட்டியிட முடியும் என்ற ஒரு விதி இந்திய தடகள சம்மேளனத்தின் கட்டமைப்பு விதிகளில் காணப்படுவது இந்திய விளையாட்டுத் துறை நிர்வாகத்துக்கான நடத்தை விதிகளுக்கு முரணாக அமைந்துள்ளது என்று இந்திய விளையாட்டு அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

இந்த விதி இருப்பதன் காரணமாக வெளியில் இருந்து எவரும் தலைவர் அல்லது செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல இந்தியாவின் பணியாளர் மற்றும் பணியாளர் பயிற்சித் துறையானது 1994ஆம் ஆண்டு சுற்றறிக்கை மூலம் ஏற்படுத்தியிருந்த ஒரு விதி கருவூலர் பதவிக்கு நடந்த தேர்தலில் மீறப்பட்டிருக்கிறது என விளையாட்டு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்திய தடகள சம்மேளத்தின் கட்டமைப்பு விதி மாற்றப்பட்டு, தலைவர் செயலாளர் கருவூலர் பதவிகளுக்கு அடுத்த அறுபது நாட்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் தடகள சம்மேளனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் இந்திய விளையாட்டு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

தேர்தல்கள் முறைப்படி நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்திய குத்துச்சண்டை சங்கம் மற்றும் இந்திய வில்வித்தை சங்கம் ஆகியவற்றின் அங்கீகாரத்தை ஏற்கனவே இந்திய விளையாட்டு அமைச்சகம் விலக்கிக்கொண்டிருந்தது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொறுப்புதாரிகள் பதவிகளுக்கு அண்மையில் நடத்தபட்ட தேர்தல்களில் முறைகேடுகள் காணப்படுவதாகக் குற்றம்சாட்டி அதன் உறுப்புரிமையை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் ரத்து செய்தன் பின்னணியில் இந்த விஷயங்களெல்லாம் நடந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.