விளையாட்டுத்துறையில் சட்டவிரோத பந்தயம் கட்டுதல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 பிப்ரவரி, 2013 - 13:45 ஜிஎம்டி

விளையாட்டுத்துறையும் அதை வைத்து பந்தயம் கட்டுவதும் (பெட்டிங் செய்வதும்) எப்போதுமே ஒன்றோடு ஒன்று இணைந்ததாகவே இருந்து வந்திருக்கின்றன.

ஆனால், இவை இரண்டுக்கும் இடையிலான உறவு வரவர மோசமானதாகவே மாறிவருகிறது.

இந்த உறவில் ஏற்பட்ட பாதிப்புக்கு முக்கியமான காரணமாகக் கூறப்படுவது சட்டவிரோதமான பந்தயங்களாகும்.

இந்த பந்தயம் கட்டும் துறையின் வளர்ச்சி என்பது வெறுமனே அதன் மூலம் கிடைக்கக்கூடிய அதிக பணத்தை மாத்திரம் மையமாகக் கொண்டது அல்ல.

உலக மட்டத்திலான விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளில் தாக்கத்தை இவை ஏற்படுத்துகின்றன என்பதுகூட இதில் முக்கியமானதாகும். அந்த அளவுக்கு இந்த பந்தயம் கட்டும் துறை விளையாட்டுத்துறையில் செல்வாக்கு செலுத்துகிறது.

மாட்ச் ஃபிக்சிங்

விளையாட்டு முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயம் செய்யும் ''மாட்ச் ஃபிக்சிங்'' குறித்து உலகெங்கும் உள்ள விளையாட்டுத்துறையினர் பெரும் கவலையில் இருக்கிறார்கள். அதனை எவ்வாறு தடுப்பது என்று அவர்கள் மிகுந்த ஆதங்கத்தில் இருக்கிறார்கள்.

இதனால்தான் விளையாட்டுத்துறைக்கும் அது குறித்து பந்தயம் கட்டும் துறைக்கும் இடையேயான் உறவு சீர்கெட்டும் வருகிறது.

சில மதிப்பீடுகளின்படி, 500 பில்லியன் டாலர்கள் வரை இந்த விளையாடுக்களின் மீது பந்தயம் கட்டும் துறையில் வருடாந்தம் சம்பந்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான, டொயோட்டா கார் நிறுவனத்தின் வருடாந்த லாபத்தைவிட இது 50 மடங்கு அதிகமாகும்.

பெருமளவிலான பந்தய மூலமான வருமானம் ஆசியாவில் இருந்துதான் கிடைப்பதாக பலர் நம்புகிறார்கள்.

சட்டவிரோத பந்தயம் கட்டுதலுக்கான காரணம்

சில நாடுகளில் விளையாட்டுகளின் முடிவுகள் குறித்து பந்தயம் கட்டுவது தடை செய்யப்பட்டுள்ளமையும், அதேவேளை, சில நாடுகளில் சட்டவிரோத பந்தய முதலாளிகளே பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு பெருமளவு பணம் கொடுப்பதும், சில இடங்களில் சமூக ரீதியான மனத்தடையும் இந்த சட்டவிரோத பந்தயம் கட்டுதலை ஊக்குவிக்கின்றன.

இந்த தொழில்துறை ஒரு சிக்கலான வலையமைப்பின் மூலமே செயற்படுகிறது.

உண்மையில் வெளிப்படையாகச் செயற்படும் ''புக்கி''களின் பங்கு இந்தத்துறையில் மிகவும் சொற்பமானதுதான். ஆனால், உண்மையான பங்காளிகளும், லாபமீட்டுபவர்களும் திரைமறைவில்தான் செயற்படுவார்கள்.

உண்மையில் இந்த வலையமைப்பில் இருப்பவர்கள் இந்த துறையை செயற்படுத்திக்கொண்டிருக்க, இதில் முதலீடு செய்து, லாபமீட்டுபவர்கள், வேறு யாராவது பெயரில், இந்த வலையமைப்புக்குள்ளேயே வராமல் பணமீட்டிக் கொண்டிருப்பார்கள்.

சட்டபூர்வமானது எது?

ஆகவே இதில் சட்ட பூர்வமானது என்ன, சடத்துக்கு புறம்பானது என்ன என்று எப்படி அடையாளம் காண்பது.
உண்மையில் இதற்கு குறிப்பான ஒரு வரைவிலக்கணத்தை கூறிவிடமுடியாது.

நாட்டுக்கு நாடு, அவற்றின் சட்ட திட்டங்களின் அடிப்படையில் சட்ட ரீதியிலான பெட்டிங் எது, சட்டத்துக்கு புறம்பானது எது என்பது மாறுபடும்.

உதாரணத்துக்கு சிங்கப்பூரில் பெட்டிங் மையத்துக்கு சென்று ஒரு உதைபந்தாட்டப் போட்டி குறித்து பெட்டிங் கட்டுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு இணையத்தின் மூலம் அதே போட்டி குறித்து பெட் கட்டுவது சட்டவிரோதமாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரை விளையாட்டுத்துறை பெட்டிங் என்பது, அது எந்த வடிவில் நடந்தாலும் சட்ட விரோதமாகும்.

சட்டவிரோதமானது எது என்பது நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும், பதிவு செய்யாத ஒரு புக்கியிடம் சென்று பெட்டிக் கட்டுவது எல்லா இடங்களிலும் சட்டவிரோதமாகும்.

இந்த சட்ட விரோத பந்தயம் கட்டும் துறையின் மிகப்பெரிய பாதிப்பு என்பதே அதனால், அரசாங்கங்களுக்கு ஏற்படும் வருமான வரி இழப்புத்தான்.

அதேபோல் சட்ட ரீதியிலான புக்கிகளுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும்.

ஆனால், இவை எல்லாவற்றையும் விட அண்மைக்காலமாக இந்த சட்டவிரோத பந்தயம் கட்டுபவர்களினால் ஏற்படுகின்ற பிரச்சினையாகக் கருதப்படுவது போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே தீர்மானிப்பதில்( மாட்ச் ஃபிக்சிங்கில்) சம்பந்தப்படுவதுதான்.

இது விளையாடுத்துறை பெறுமானங்களையே கேள்விக்குள்ளாக்கிறது.

இப்படியான செயற்பாட்டை பங்குச் சந்தையில் உட்தகவல்களை முதலில் சட்டவிரோதமாக அறிந்து, முதலீடு செய்யும் சட்டவிரோத நடவடிக்கைக்கு ஒத்ததாக ஆய்வாளர்கள் பார்க்கிறார்கள்.

இந்த நடவடிக்கைகள் சட்ட விரோதம் என்பதுடன், விளையாட்டுத்துறையின் உத்வேகத்தினையே கெடுத்துவிடும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.