இறகுப் பந்தாட்டம்: யுகாண்டா ஓபனில் இலங்கையின் டினுகா சாம்பியன்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 பிப்ரவரி, 2013 - 12:00 ஜிஎம்டி
டினுகா கருணரட்ண

டினுகா கருணரட்ண

ஆப்பிரிக்காவின் யுகாண்டாவில் நடந்து முடிந்த யுகாண்டா சர்வதேச பாட்மிண்டன் பந்தயத்தில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இலங்கையின் டினுகா கருணரட்ணவும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரானெ சைலியும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

லுகோகோ நகரில் நேற்று ஞாயிறன்று நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தே சுபாங்கரை 21 - 16, 21 - 17 என்ற நேர் செட் கணக்கில் டினுகா வீழ்த்தினார். இந்த இரண்டு ஆட்டங்களிலுமேயே ஆரம்பத்தில் சுபாங்கர் முன்னிலை வகித்தாலும் டினுகா சிறப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் விளையாடி 34 நிமிடங்களில் இறுதி ஆட்டத்தை வென்றார்.

சென்ற வருடம் உகாண்டா ஓபன் பட்டத்தை டினுகாவின் சகோதரர் நிலுகா வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்மிண்டனில் முன்னிலை வகிக்கும் இந்தியாவிலிருந்து ஒருவரை வென்று இம்முறை பட்டம் வென்றது பெரிய மகிழ்ச்சியைத் தருவதாக டினுகா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரையிறுதியில் டினுகா இத்தாலியின் ஜியோவனி கிரெகோவையும், சுபங்கர் இத்தாலியின் டேனியல் மெஸ்ஸெர்ஸியையும் வென்று இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்திருந்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சைலி எகிப்தின் ஹோஸ்னி ஹதியாவை 21-12, 21-12 என்ற நேர் செட்களில் வீழ்த்தி பட்டம் வென்றார். ஹதியா ஆப்பிரிக்க கண்டத்தில் பெண்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளவர் என்றாலும், சைலியின் சிறப்பான ஆட்டத்துக்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

யுகாண்டா சர்வதேச பாட்மிண்டன் பந்தயத்தில் இந்தியா, இலங்கை இத்தாலி மட்டுமல்லாது ஜெர்மனி, ஹங்கேரி, ஸ்காட்லாந்து, மொரீஷியஸ், கென்யா, எகிப்து போன்ற வெளிநாட்டு வீரர்களும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.