ஐபிஎல்: சிக்கலில் சீனிவாசனும், அவர் மருமகனும்

குருநாத் மெய்யப்பன் படத்தின் காப்புரிமை csk
Image caption குருநாத் மெய்யப்பன்

இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் ஸ்பாட் பிக்சிங் மற்றும் சூதாட்டம் தொடர்பான விசாரணைகளின் ஒருபகுதியாக, ஐபிஎல் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான என்.ஸ்ரீநிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனிடம் மும்பை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை இரவு துவங்கி தொடர் விசாரணைகளை நடத்திவருகிறார்கள்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வைத்து நாடுதழுவிய அளவில் நடந்ததாகக் கூறப்படும் சூதாட்டம் தொடர்பான விசாரணைக்கு இவர் மும்பைக்கு வரவேண்டும் என்று மும்பை காவல்துறையினர் இவரை வியாழக்கிழமை சம்மன் மூலம் அழைத்திருந்தனர்.

வெள்ளியன்று மாலை ஐந்துமணிக்குள் அவர் மும்பை காவல்துறையினரிடம் நேரில் ஆஜராகவேண்டும் என்று கெடுவிதிக்கப்பட்டிருந்தது. இந்த கெடுவை நீட்டிக்கும்படி குருநாத் மெய்யப்பன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அந்த கோரிக்கையை மும்பை காவல்துறை நிராகரித்துவிட்டதைத் தொடர்ந்து, வெள்ளியன்று மாலை அவர் தனி விமானம் மூலம் மும்பை சென்றார். அவரை மும்பை காவல்துறை அதிகாரிகள் விமான நிலையத்திலிருந்து நேரே தங்களின் அலுவலகம் அழைத்துச் சென்ற மும்பை காவல்துறை அதிகாரிகள், அங்கே வைத்து அவரிடம் விசாரித்துவருகின்றனர்.

சீனிவாசன் பதவி விலக்கோரிக்கை

இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் உடனடியாக பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும், ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான புனே வாரியர்ஸ் அணியின் உரிமையாளரும் பிரபல தொழிலதிபருமான சுப்ரதா ராய் உள்ளிட்ட பலர், சீனிவாசனின் மருமகன் மீதே சூதாட்ட புகார்கள் வந்திருப்பதைத் தொடர்ந்து அவர் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கிரிக்கெட் சூதாட்டத்தில் பலர் கைது

“குருநாத் மெய்யப்பன் நிர்வாகத் தலைவரல்ல”

இதற்கிடையே, குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்தலைவரோ, உரிமையாளரோ அல்ல என்று இந்தியா சிமெண்ட்ஸின் சார்பில் விடுக்கப்பட்டிருக்கும் இன்றைய செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அவர் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே என்றும், இந்தியா சிமெண்ட்ஸின் துணைத்தலைவர் டி எஸ் ரகுபதி தெரிவித்துள்ளார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவதற்கு இந்தியா சிமெண்ட்ஸ் முழு ஒத்துழைப்புக் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், குருநாத் மெய்யப்பன், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் நிர்வாகத்தலைவர் என்கிற ரீதியிலேயே இதுநாள் வரை எல்லா ஊடகங்களிடமும் பேட்டிகள் கொடுத்திருந்ததாக இந்திய ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் ஆடும் ஆடுகளத்திற்குள் செல்வதற்கான அதிகார்ப்பூர்வ அடையாள அட்டையிலும், அவரது டுவிட்டர் கணக்கிலும் கூட சென்னை சூப்பர்கிங்ஸின் நிர்வாகத்தலைவர் என்றே அவர் குறிக்கப்பட்டிருந்தார் என்றும் ஊடகங்களில் புகைப்படங்களுடனான செய்திகள் வெளியாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஐபிஎல்லுக்கு எதிர்ப்பு உருவாகியிருக்கிறது

முன்னதாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, மூன்று கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் உட்பட பல இடைத்தரகர்களை டெல்லி காவல்துறை கைது செய்தது. அதன் அடுத்த கட்டமாக, மும்பை காவல்துறை நடிகர் விந்து தாராசிங் என்பவரை கைது செய்தது. அவருடன் குருநாத் மெய்யப்பன் தொடர்ந்து தொலைபேசித் தொடர்பில் இருந்தார் என்று தெரிவித்த மும்பை காவல்துறையினர் அந்த தொடர்பு மற்றும் தொலைபேசிப் பேச்சுக்கள் தொடர்பாக அவரிடம் விசாரிக்கவேண்டும் என்று கூறி அவரை மும்பை வரும்படி அழைத்திருந்தனர். அவரிடம் அதுகுறித்தே தற்போது விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த விசாரணைகளின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என்று ஊடகங்களில் ஊகங்கள் வெளியாகிவந்தாலும், இந்த நிமிடம் வரை அவரிடம் தாங்கள் விசாரணைகள் மட்டுமே நடத்திவருவதாக மும்மை காவல்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.