'இலங்கை ரக்பி நடுவர்கள் விரக்தியால் ஓய்வுபெறுகின்றனர்'

  • 31 மே 2013
ரோஹித்த ராஜபக்ஷ(22) நடுவரைத் தாக்கியதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்
Image caption ரோஹித்த ராஜபக்ஷ(22) நடுவரைத் தாக்கியதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்

இலங்கையில் ரக்பி போட்டி நடுவர்கள் பலரும் தொழில்களிலிருந்து ஓய்வுபெற்றுக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை ரக்பி நடுவர்கள் சங்கம் கூ றுகிறது.

இதனால் அடுத்துவரும் கழக மட்ட போட்டிகளின்போது பணியாற்றுவதற்கு கூட நடுவர்கள் இல்லாமல்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரக்பி நடுவர்கள் சங்கத்தின் தலைவர் ஓவில் பெர்ணான்டோ பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

கடந்த மார்ச் 5-ம் திகதி நேவி எதிர் பொலிஸ் கழகங்களுக்கு இடையிலான போட்டியொன்றில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன், 22 வயதான ரோஹித்த ராஜபக்ஷ திமித்ரி குணசேகர என்ற நடுவரை தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால் சம்பவம் தொடர்பில் இலங்கை ரக்பி விளையாட்டுச் சங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்த முக்கிய நடுவர்கள் அழுத்தம் காரணமாக தொழிலிருந்தே ஓய்வுபெற்றுச் செல்வதாகவும் ஓவில் பெர்ணான்டோ சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் ஒருமாத காலத்தில் மூத்த நடுவர்கள் நால்வர் ஓய்வுபெற்றுச் செல்வதாகவும் ரக்பி நிர்வாக சபை நடவடிக்கை எதுவும் உருப்படியாக எடுக்காவிட்டால் நிலைமை மோசமாகும் என்றும் ஓவில் பெர்ணான்டோ கூறினார்.

வேறொரு போட்டி தொடர்பில் நடவடிக்கை

இதனிடையே, ரோஹித்த ராஜபக்ஷவினால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நடுவர் திமித்ரி குணசேகர மீது, வேறொரு போட்டியொன்று தொடர்பில் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவரும் இன்னொரு நடுவரும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரோயல் எதிர் இசிபத்தனை கல்லூரிகளுக்கு இடையில் நடந்த போட்டியொன்றின்போது போட்டியை உன்னிப்பாக அவதானிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில், அவர்களுக்கு ஒருமாத காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர இன்னொரு மூத்த நடுவருக்கு ஓராண்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு நடுவரும் இடைநிறுத்தப்பட்டுள்ளார். மொத்தமாக 4 நடுவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலை மட்டப் போட்டி ஒன்று தொடர்பில் நடுவர் திமித்ரி குணசேகர மீது போட்டித் தடை விதிக்கப்பட்டமைக்கும், அவர் ஜனாதிபதியின் மகனால் ஏற்கனவே கழக மட்ட

போட்டியொன்றில் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என்றும் ஓவில் பெர்ணாண்டோ கூறினார்.

ஜனாதிபதியின் மகனால் ரக்பி நடுவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவது பற்றிய விசாரணைகளின் நிலை என்னவென்று இலங்கை ரக்பி சங்கத்தின் கருத்தை உடனடியாகப் பெறமுடியவில்லை.