சாம்பியன்ஸ் ட்ராஃபி இறுதியாட்டம் மழையை அடுத்து ஆரம்பமானது

  • 23 ஜூன் 2013
போட்டி நடக்காவிட்டால் இரண்டு அணிகளும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்
Image caption போட்டி நடக்காவிட்டால் இரண்டு அணிகளும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்

இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சாம்பியன்ஸ் ட்ரோஃபி கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் மழை காரணமாக தடைப்பட்டு தற்போது ஆரம்பமானது.

இந்தியா துடுப்பெடுத்து ஆடுகிறது. 20 ஓவர்கள் மாத்திரமே ஆட்டம் நடக்கும்.

முன்னைய செய்தி :

இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கிடையே பர்மிங்ஹாம் நகரின் மைதானத்தில் நடைபெறவிருந்த சாம்பியன்ஸ் ட்ரோஃபி கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் மழை காரணமாக தடைபட்டுள்ளது.

காலை 10.30 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய இந்தப் போட்டி 5 மணிநேரம் ஆன பிறகும் இன்னும் தொடங்கவில்லை.

முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை முதலில் ஆடுமாறு கேட்டுக்கொண்டது.

எனினும், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஆடுகளத்துக்குள் நுழைய முன்னரே, பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது.

பின்னர் 12 மணியளவில் ஆடுகளத்தை நடுவர்கள் பார்வையிடுவதாக இருந்தது.

நடுவர்கள் மைதானத்துக்குள் செல்லவிருந்த நிலையில், மீண்டும் மழை பெய்ததால் ஆடுகளத்தை சோதனையிடும் பணி மீண்டும் தடைபட்டது.

தற்போது விளையாட்டரங்கப் பணியாளர்கள் ஆடுகளத்திலிருந்து நீரை இரண்டு இயந்திரங்களின் உதவியுடன் உறிஞ்சி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆடுகளமும் அதனைச் சுற்றியுள்ள இடங்களும் நீர்ப்புகாத வண்ணம் மூடப்பட்டுள்ளன.

இரண்டாவது தடவையாக 3.45 மணியளவில் ஆட்டம் ஆரம்பிக்கலாம் என்று இருந்தது. ஆனால், அப்போதும் மழை மீண்டும் பிடித்துக்கொண்டிருக்கிறது.

மழைநின்று விளையாடுவதற்குரிய சூழல் ஏற்பட்டால் குறைந்த ஓவர்களுடன் போட்டி நடைபெறும் வாய்ப்பு உள்ளதாக ஐசிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மழை காரணமாக, போட்டி கைவிடப்பட்டால் இரு அணிகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

பரிசுத் தொகையையும் சமமாக பங்கிட்டுக்கொள்வார்கள்.