தாவூத் இப்ராஹிம், ஸ்ரீசாந்த் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

  • 30 ஜூலை 2013
Image caption ஐபிஎல் ஊழல் குறித்து ரசிகர்களிடையே பெரும் கோபம் எழுந்துள்ளது.

இந்தியப் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெற்றதான முறைகேடுகள் குறித்த விசாரணைகளை அடுத்து, தாவூத் இப்ராஹிம், ஸ்ரீசாந்த் உள்ளிட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடில்லியிலுள்ள ஒரு நீதிமன்றத்தில், டில்லி காவல்துறையினர் சுமார் ஐயாயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை செவ்வாய்கிழமை பதிவு செய்தனர்.

திட்டமிட்டு செய்யப்படும் குற்றச் செயல்களுக்கு எதிரான மராட்டிய மாநிலச் சட்டத்தின் கீழ் 39 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 39 பேரில், 29 பேரை ஏற்கனவே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிலருக்கு பிணையும் வழங்கப்பட்டுள்ளது.

தாங்கள் பதிவு செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இந்த முறைகேடுகளில் தாவூத் இப்ராஹிம் ஈடுபட்டிருந்தற்கான தொலைபேசி உரையாடலின் சாட்சிகளும் ஆவணங்களாக பதியப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

“விசாரணையும் அறிக்கையும் செல்லாது”

Image caption கிரிக்கெட் வாரிய விசாரணை குறித்து நீதிமன்றம் கடும் விமர்சனம்

இதனிடையே, இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க கிரிக்கெட் வாரியம் அமைத்த குழு செல்லாது என்று மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

அப்போட்டிளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க கிரிக்கெட் வாரியம் அமைத்த குழு சட்டவிரோதமானது மற்றும் அரசியல் சாசனத்துக்கு புறம்பானது என்று இரண்டு நீதிபதிகளை அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

கிரிக்கெட் வாரியத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதிகள் ஜெயராம சவுதா மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய குழு கடந்த ஞாயிற்றுகிழமை கையளித்த தமது அறிக்கையில், ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ் குந்த்ரா ஆகியோர் குற்றவாளிகள் இல்லை என்று கூறியிருந்ததாக கிரிக்கெட் வாரியத் தகவல்கள் கூறின.

Image caption ஸ்ரீநிவாசன் தலைவராக தொடருவாரா என்று கேள்விகள்

எனிமும் அந்த அறிக்கையை கிரிக்கெட் வாரியம் இதுவரை வெளியிடவில்லை.

தாங்கள் நடத்தும் ஒரு போட்டிகள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமே தமது சட்டங்களின் கீழ் ஒரு குழுவை அமைத்ததும் அக்குழு அளித்துள்ள அறிக்கையும் சட்டவிரோதமானது என்று நீதிபதிகள் வசிஃப்தார் மற்றும் சோனக் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

இந்த ஆண்டு இடம்பெற்ற ஐ பி எல் போட்டிகளில், முறைகேடுகள் இடம்பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று பிஹார் கிரிக்கெட் சங்கம் தொடுத்த வழக்கிலேயே இன்றையத் தீர்ப்பு வந்துள்ளது என்று அதன் பொதுச் செயலர் ஆதித்ய வர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.