ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் மல்யுத்தம்

Image caption பல நாடுகளில் மல்யுத்தம் பிரபலமாகவுள்ளது.

இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் மல்யுத்தம் இடம்பெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் முடிவெடுத்துள்ளது.

அர்ஜெண்டினா நாட்டின் தலைநகர் புவனஸ் அயர்ஸில் நடைபெற்றுவரும் அந்த அமைப்பின் கூட்டத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் டோக்யோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின்போது மீண்டும் இடம்பெறுவது முடிவானது.

மல்யுத்தப் போட்டிகள் நவீனப்படுத்தப்படவில்லை எனும் காரணத்தைக்காட்டி இந்த ஆண்டின் முற்பகுதியில் ஒலிம்பிக் போட்டிகளின் பட்டியலிருந்து மல்யுத்தம் நீக்கப்பட்டது.

பின்னர் மல்யுத்தம் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்பட வேண்டும் எனும் அழுத்தங்கள் பல நாடுகளிலிருந்து கொடுக்கப்பட்டன.

பெரும் மாற்றங்கள்

Image caption இந்தியாவிலிருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

2020 ஒலிம்பிக் போட்டிகளில் 26 ஆவது விளையாட்டாக எதைச் சேர்ப்பது என்பது குறித்த நடைபெற்ற போட்டியில், ஸ்குவாஷ் மற்றும் பேஸ்பால்-சாஃப்ட்பால் ஆகிய போட்டிகளைவிட மல்யுத்தத்துக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்தன.

மல்யுத்த விளையாட்டுப் போட்டியின் நிர்வாகிகள் ஆட்டத்தின் சட்டதிட்டங்களை மாற்றியமைத்ததோடு, நிர்வாகச் சீர்திருத்தம், பாலின சமன்பாடு மற்றும் போட்டியின் நடைமுறைகள் ஆகியவற்றையும் மாற்றிய அமைத்ததே, அந்த விளையாட்டு மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற வழிவகுத்தது என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து மல்யுத்தம் நீக்கப்பட்டது விளையாட்டுத்துறையினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.