முதலிடத்துக்கு யோக்கோவிச், நடாலிடையே கடும் போட்டி

  • 23 செப்டம்பர் 2013
Image caption நூறாவது வாரமாக முதலிடத்தில் இருக்கிறார் யாக்கோவிச்

உலகளவில் ஆடவர் டென்னிஸின் இந்த வாரத்துக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

அதன்படி செர்பியாவின் நோவாக் யாக்கோவிச் கடந்த நூறு வாரங்களாக முதலிடத்தில் இருக்கிறார்.

இதுவரை ஒன்பது பேர் அவ்வகையில் உலக அளவில் நூறு வாரங்கள் அல்லது அதற்கு மேலான காலத்துக்கு தரவரிசையின் முதலிடத்தில் இருந்துள்ளனர்.

அந்த தரவரிசையில் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் இப்போது இருக்கும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தான் இதுவரை மிக அதிகமாக 302 வாரங்களுக்கு ஆடவர் தரப்பட்டியலின் முதலிடத்தில் இருந்துள்ளார்.

பீட் சாம்ப்ராஸ், இவான் லெண்டல், ஜிம்மி காணர்ஸ், ஜாம் மெக்கென்ரோ, யான் போர்க், ரஃபேல் நடால், ஆண்ட்ரே அகாஸி ஆகியோரும் நூறு வாரங்களுக்கு மேல் முதலிடத்தில் இருந்துள்ளனர்.

தற்போது 11,120 புள்ளிகளுடன் நோவாக் யாக்கோவிச் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ரஃபேல் நடால் உள்ளார். அவரது புள்ளிகள் கணக்கு 10,860.

Image caption மீண்டும் முதலிடத்தைப் பெற நடால் முயற்சி

இவர்கள் இருவரிடையே 260 புள்ளிகள் மட்டுமே வித்தியசம் உள்ள நிலையில், இந்த வருடத்தில் முடிவில், மூன்றாவது முறையாக உலகளவில் நோவாக் யாக்கோவிச் முதலிடத்தில் இருப்பாரா, அல்லது அந்த இடத்தை ரஃபேல் நடால் கைப்பற்றுவாரா என்பதே டென்னிஸ் வட்டாரங்களில் இப்போது இருக்கும் எதிர்பார்ப்பு.

இன்னும் ஒரு வாரத்தில் சீன ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இந்த இருவரில் யார் வெற்றி பெருகிறார்களோ அவர்களே ஆடவர் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தை பெறுவர்.

அந்தப் போட்டி செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தொடங்குகிறது.