ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"உலக சதுரங்கப் போட்டி: முதல் இரண்டு ஆட்டங்களும் ஏமாற்றம்"

சென்னையில் நடைபெற்றுவரும் உலக சதுரங்கப் பட்டயப் போட்டியின் முதல் இரண்டு ஆட்டங்களும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தன என்று இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் மானுவேல் ஆரோன் கூறுகிறார்.

Image caption உலகப் பட்டத்துக்கான மோதலில் கார்ல்சன் மற்றும் ஆனந்த்-போட்டி சென்னையில்.

உலகின் இரண்டு முன்னணி வீரர்களான விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் பங்குபெறும் இந்தப் போட்டியின் முதலிரண்டு ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்தது பெரும் அதிருப்தியை அளிக்கிறது என்று அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

மிகக் குறைவான நகர்வுகளில் இருவரும் முதல் இரண்டு ஆட்டங்களை வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொள்ள இணங்கியது சதுரங்க ரசிகர்களை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இருவருக்கும் அடுத்தவர் மீது இருக்கும் பரஸ்பர பயம் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

12 ஆட்டங்கள் மட்டுமே கொண்ட உலகச் சதுரங்கப் போட்டியில் முதல் இரண்டு ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளது, உலக சதுரங்கப் போட்டியின் நடைமுறையே சரியில்லையோ என்று எண்ண வைக்கிறது என மானுவேல் ஆரோன் கூறுகிறார்.

எனிமும் அடுத்து வரக்கூடிய பத்து ஆட்டங்களிலும் விறுவிறுப்பு கூடுதலாக இருக்கும் எனும் எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஆனந்த இரண்டாவது ஆட்டத்தை வென்றிருக்க வேண்டும் என்றும், அதை ஏன் அவர் நழுவவிட்டார் என்பதும் புரியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.