சோச்சி ஒலிம்பிக்ஸ் : கடும் பரிசோதனைகள் காத்திருக்கின்றன.

  • 3 பிப்ரவரி 2014
படத்தின் காப்புரிமை b
Image caption பனிச்சறுக்கு விளையாட்டு குளிர்கால ஒலிம்பிக்ஸில் கவர்ச்சிகரமான ஒன்று

ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.

அந்தப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஊக்க மருந்து பயன்பாடு குறித்த பரிசோதனைகள் மிகக் கடுமையாக இருக்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்துள்ளது.

சோச்சி ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்க மருந்து பயன்பாட்டை தவிர்ப்பது குறித்த உயர்மட்டக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி சோச்சியில் மொத்தமாக 2,453 பரிசோதனைகளை மேற்கொள்ளப்படும் என்று, சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் செய்தித் தொடர்பு இயக்குநர் மார்க் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption சோச்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள்

இந்தப் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், ரஷ்யாவின் ஐரீனா ஸ்டாரிக் எனும் போட்டியாளர் ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்ததால் போட்டியிலிருந்து விலகினார்.

கடந்த முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டி கனடாவின் வான்கூவர் நகரில் நடைபெற்றபோது, சோச்சியில் திட்டமிடப்பட்டுள்ளதைவிட குறைவான அளவுக்கு ஊக்கமருந்து பரிசோதனைகள் நடைபெற்றன.

தொழில்நுட்பம் ஒத்துழைக்கும்பட்சத்தில், இம்முறை சோச்சியில் விளையாட்டு வீரர்களிடமிருந்து பரிசோதனைக்காக எடுக்கப்படும் மாதிரிகள் பத்தாண்டுகளுக்கு பாதுகாத்து வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை சோச்சியில் போட்டிகள் முடிவடைந்த பிறகும் ஆயிரத்துக்கும் அதிகமான ஊக்க மருந்து பரிசோதனைகள் நடத்தப்படும் என்று கூறியுள்ள சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் இதில் குறிப்பாக ஐஸ் ஹாக்கி போன்ற குழு விளையாட்டின் மீது அதிகம் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.