ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிரிக்கெட் : தலைவர் பதவியில் ஸ்ரீநிவாசன் தொடரலாமா?

படத்தின் காப்புரிமை csk
Image caption குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குருநாத் மெய்யப்பன்

உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பதாகக் கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் ஊழல் நடைபெற்றுள்ளது என்பது இன்று வெளியான நீதிபதி முட்கல் அறிக்கையின் மூலம் தெளிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐபில் கிரிக்கெட் போட்டிகளில், உள்குத்துக்கள் இருந்தன, முறைகேடான வகையில் மோசடிகளும், போட்டிகளின் மீது பந்தயம் கட்டுதலும் இடம்பெற்றன என்று எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து பலரின் கைதுகள் நடைபெற்றன.

இன்று வெளியாகியுள்ள நீதிபதி முட்கல் தலைமையிலான அறிக்கை சென்னை சூப்பர் கிங்கஸ் அணி மற்றும் அதன் தலைமை மீதிருந்த சந்தேகங்களை உறுதி செய்வதாகவே அமைந்துள்ளன என்கிறார் கிரிக்கெட் விமர்சகரும், கிரிக்கின்ஃபோ இணையதளத்தை இணைந்து உருவாக்கியவருமான பத்ரி சேஷாத்ரி.

அடுத்து என்ன?

படத்தின் காப்புரிமை PTI
Image caption இந்த மகிழ்ச்சி நீடிக்குமா எனக் கேள்விகள்

ஐபிஎல் போட்டிகளில் ஊழல் இடம்பெற்றதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து விசாரித்து அறிக்கை தருமாறு கோரியது.

அந்தக் குழுவோ குருநாத் மெய்யப்பன் மற்றும் ஸ்ரீநிவாசன் மீது தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை என்று ஒரு அறிக்கையை அளித்தது.

அதற்கு எதிராக ஒரு வழக்கு உச்சநீதிமன்றம் வரை செல்லவே, நீதிபதி முட்கல் தலைமையிலான ஒரு குழு அமைக்கப்பட்டு, இது விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் வாரியங்களின் தலைவராக இருக்கும் என் ஸ்ரீநிவாசன், இதுவரை இந்த அறிக்கை குறித்தோ தனது நிலைப்பாடு குறித்தோ கருத்து வெளியிடவில்லை.

நீதிபதி முட்கல் தனது அறிக்கையில் அவரது மருமகன் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்துள்ள போதிலும், தார்மீக அடிப்படையில் கூட அவர் பதவி விலகமாட்டார் என்றே தனக்கு தோன்றுகிறது எனவும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் பத்ரி சேஷாத்ரி.