தோனி தொடர்பில் செய்தி வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை

தோனி படத்தின் காப்புரிமை Reuters
Image caption தோனி

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனிக்கு எதிரான செய்திகளை வெளியிட இந்திய உயர் நீதிமன்றம் ஒன்று இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

மஹேந்திர சிங் தோனியை தொடர்புபடுத்தி, கிரிக்கெட் சூதாட்டம், மேட்ச் ஃபிக்ஸிங் குறித்த செய்திகளை வெளியிடக்கூடாது என ஜீ மீடியா கார்ப்பரேஷன் லிமிட்டெட், நியூஸ் நேஷன் நெட்வொர்க் ஆகிய ஊடக நிறுவனங்களுக்கு இரு வார கால தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கிரிக்கெட் வீரர் தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் தன்னைப் பற்றி, அவதூறான, தவறான, தன் புகழுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய செய்திகளை ஜீ மீடியா கார்ப்பரேஷன், நியூஸ் நேஷன் நெட்வொர்ட் ஆகியவை வெளியிட்டுவருவதால் தான் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

"கடந்த பிப்ரவரி 11ஆம் தேதியிலிருந்தே ஜீ மீடியா கார்ப்பரேஷன் லிமிட்டட் நிறுவனமானது இடைநீக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான ஜி சம்பத்குமாருடன் இணைந்து தான் கிரிக்கெட் சூதாட்டம், மேட்ச் பிக்ஸிங் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பதாக தவறான செய்திகளை ஒளிபரப்பிவருகிறது. அதேபோல, நியூஸ் நேஷன் நெட்வொர்க் பிரைவேட் லிமிட்ட் நிறுவனமும் தன்னைப் பற்றிய தவறான செய்திகளை ஒளிபரப்புவதோடு, தன்னை விசாரிக்க தமிழ்நாடு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்ததாகவும் தவறான தகவல்களைத் தெரிவித்திருந்தது." என தோணி தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

தன்னைப் பற்றி பொதுமக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் வெறுப்பையும் கேலியையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தச் செய்திகள் வெளியிடப்பட்டதாக தோனி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் தன் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டிருப்பதால், இந்தத் தொலைக்காட்சி நிறுவனங்களும் சம்பத்குமாரும் நஷ்ட ஈடாக 100 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடவேண்டும் என தோனி தனது மனுவில் கோரியிருந்தார்.

இதனை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். தமிழ்ச்செல்வன், தோனியை சூதாட்டத்தோடு தொடர்புபடுத்தி செய்தி வெளியிட இரண்டு வாரங்களுக்கு இடைக் காலத் தடைவிதித்து இரண்டு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.