"இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இவ்வாண்டில் சாத்தியம்"

நஜம் சேத்தி படத்தின் காப்புரிமை AP
Image caption நஜம் சேத்தி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முடிந்த பின்னர் இந்த வருட கோடைக்காலத்தில், பாகிஸ்தானும் இந்தியாவும் சிறிதாக இருதரப்பு கிரிக்கெட் தொடர் ஒன்றை விளையாட முடியும் என தான் நம்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் நஜம் சேத்தி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் ஆட்டங்களை இந்தியாவுக்குள் மட்டுமல்லாது ஐக்கிய அரபு எமிரேட்டிலும் நடத்த இந்தியா தீர்மானித்துள்ளது, தமக்கு ஒரு நல்ல விஷயமாகப் படுகிறது ஏனென்றால், பாகிஸ்தானுக்கு வந்து விளையாட இந்தியா விருப்பப்படாத பட்சத்தில், இதுபோன்ற வெளியிடங்களில் இந்தியாவை எதிர்த்து பாகிஸ்தானால் விளையாட முடியும் என தாக்காவில் ஊடகவியலாளர்களிடம் பேசிய சேத்தி கூறினார்.

இருபது ஓவர் உலகக் கோப்பை பந்தயம் முடிந்த பின்னர் பாகிஸ்தான் உடனடியாக எந்த கிரிக்கெட் தொடரிலும் விளையாடவில்லை என்றும் எனவே இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தியாவுடன் அது ஒரு சின்னத் தொடரில் விளையாட சந்தர்ப்பம் உண்டு என்று அவர் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பாகிஸ்தான் வந்திருந்த இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதன் பின்னர், எந்த ஒரு சர்வதேச டெஸ்ட் அணியும் பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.