டி-20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு இலங்கை தகுதி

  • 31 மார்ச் 2014

வங்கதேசத்தில் நடைபெற்றுவரும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.

வெற்றிக் களிப்பில் இலங்கை வீரர்கள்

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மிக முக்கியமான ஆட்டமொன்றில் இலங்கை அணி நியூசிலாந்து அணியை 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

சுழற்பந்து வீச்சாளரான ரங்கண ஹேரத் சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணி அரையிறுதிக்கு நுழைய வழி வகுத்தார்.

தொடக்கம் முதலே தடுமாறிய நியூசிலாந்து அணியின் ஆட்டக்காரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர்.

முக்கியமான இந்த ஆட்டத்தில் முதலாவதாக ஆடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் 119 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணியின் முன்னணி ஆட்டக்காரர்கள் பெரிய அளவில் ஓட்டங்களை பெறாமலேயே ஆட்டமிழந்தனர். அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன அதிகபட்சமாக 25 ஓட்டங்களை எடுத்தார்.

மஹேல ஜெயவர்தன ஆட்டமிழக்கும் காட்சி

தில்ஷான் திலகரட்ண மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களையே பெற்றனர்.

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் பௌல்ட் மற்றும் நீஷம் தலா மூன்று விக்கெட்டுகளையும், மெக் கிளெனஹன் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

மாலிங்க தலைவர்

லசித் மாலிங்க

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தலைமையேற்றிருந்தார். இலங்கை அணிக்கு அவர் தலைமையேற்பது இதுவே முதல் முறை.

இந்தப் போட்டிக்கு இலங்கை அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருந்த தினேஷ் சண்டிமாலுக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால மாலிங்க இன்றைய ஆட்டத்துக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நடைபெற்றுவரும் இந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும் தகுதி பெற்றுள்ளன.

இந்தச் செய்தி குறித்து மேலும்