டென்னிஸ்: நடால், செரீனாவுக்கு முதலிடம்

  • 7 ஏப்ரல் 2014
ரஃபேல் நடால்

உலக டென்னிஸ் வீரர்களின் தரப்பட்டியலில் ஆடவர் பிரிவில் ரஃபேல் நடாலும், மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸும் முதலிடம் பிடித்துள்ளனர்.

சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் இன்று வெளியிட்டுள்ள பட்டியலில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 13,730 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

அவருக்கு அடுத்த இடத்தில் செர்பியாவின் நோவாக் யாக்கோவிச் உள்ளார். இருவரிடையேயும் 2050 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. மூன்றாவது இடத்தில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா உள்ளார்.

அடுத்தடுத்து ஏற்பட்ட சில தோல்விகள் காரணமாக பல வாரங்களாக முதல் நான்கு பேரில் இடம்பிடித்திருந்த பிரிட்டனின் ஆண்டி மர்ரி இன்று வெளியாகியுள்ள பட்டியலில் எட்டாவது இடத்திலேயே உள்ளார்.

செரீனா வில்லியம்ஸ்

மகளிர் பிரிவைப் பொருத்தவரையில், செரீனா வில்லியம்ஸின் ஆளுமை தொடருகிறது. கடந்த வாரம் சார்லஸ்டோனில் நடைபெற்ற ஒரு டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்றுகளிலேயே வெளியேறியிருந்தாலும் அவர் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

அவர் 12,375 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தாலும் அவருக்கும் அடுத்த இடத்தில் இருக்கும் சீனாவின் லீ நா வுக்கும் இடையே 5000 புள்ளிகளுக்கும் அதிகமான வித்தியாசம் உள்ளது.

அண்மையில் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியை லீ நா வென்றிருந்தாலும் அவரால் முதலிடத்துக்கு முன்னேற வேண்டிய அளவுக்கு புள்ளிகளைப் பெறமுடியவில்லை.

மகளிர் பிரிவில் போலந்தின் அக்னிஸ்கா ரட்வன்ஸ்கா மூன்றாவது இடத்திலுள்ளார்.

டேவிஸ் கோப்பை முடிவுகள்

டேவிஸ் கோப்பை போட்டியில் செக் குடியரசு வீரர்கள்

இதனிடையே நாடுகளுக்கு நடைபெறும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகளின் காலிறுதிச் சுற்றுகள் நேற்றுடன் முடிவடைந்தன.

இதில் முதல் ஆட்டத்தில் செக் குடியரசு ஜப்பானை 5-0 எனும் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் பிரான்ஸ் ஜெர்மனியை 3-2 எனும் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

மற்ற இரு காலிறுதிப் போட்டிகளில் இத்தாலி பிரிட்டனை 3-2 எனும் கணக்கிலும் அதே போல சுவிட்சர்லாந்து கஸகஸ்தானையும் வென்றன.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதிகள் வரை அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அதில் செக் குடியரசு பிரான்ஸை எதிர்த்தும், இத்தாலி சுவிட்சர்லாந்தை எதிர்த்தும் ஆடவுள்ளன.

இறுதி ஆட்டம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.