ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளாஸ்கோ 2014: 20-வது காமன்வெல்த் விளையாட்டு விழா

  • 21 ஜூலை 2014
Image caption 23-ம் திகதி புதன்கிழமை மாலை 8 மணிக்கு 20-வது காமன்வெல்த் விளையாட்டு விழா தொடங்குகின்றது

கிளாஸ்கோ 2014- 20-வது காமன்வெல்த் விளையாட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் எல்லாம் பூர்த்தியாகி, ஸ்கொட்லாந்தின் மிகப்பெரிய நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

கிளாஸ்கோ நகரின் செல்டிக் பார்க் அரங்கில் 23-ம் திகதி புதன்கிழமை- இரவு 8 மணிக்கு பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் விழாவை தொடங்கிவைக்கிறார்.

10 மாதங்களாக காமன்வெல்த் நாடுகள் ஊடாக பயணித்து திரும்பியுள்ள விளையாட்டுச் சுடரின் செய்தியையும் மகாராணி இங்கு வாசிப்பார்.

1930- முதல் 7 நாடுகளிலுள்ள 18 நகரங்களில் இதுவரை காமன்வெல்த் விளையாட்டு விழா நடந்திருக்கின்றது.

ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய அணிகள் மட்டுமே இதுவரை நடந்துள்ள எல்லா காமன்வெல்த் போட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளன.

ஆஸ்திரேலியா தான் 12 போட்டிகளில் கூடுதல் பதக்கங்களை வென்று முன்னணியில் திகழ்கின்றது. இங்கிலாந்து 6 காமன்வெல்த் போட்டிகளிலும் கனடா ஒரு போட்டியிலும் அதிகபடியான பதக்கங்களை வென்றுள்ளன.

காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா

Image caption பிரிட்டிஷ் மகாராணி தொடங்கிவைத்த காமன்வெல்த் சுடர் வலம் 10 மாத பயணத்துக்குப் பின்னர் கிளாஸ்கோ வந்தடைந்துள்ளது

1947- இல் காமன்வெல்த்தில் இணைந்த இந்தியா, இதுவரை 14 விளையாட்டு விழாக்களில் கலந்துகொண்டுள்ளது.

2002- மான்சஸ்டர் போட்டிகளில் 69 பதக்கங்களையும், 2006- மெல்போர்ன் போட்டிகளில் 50 பதக்கங்களையும், 2010- இல் இந்தியாவே நடத்திய 19வது காமன்வெல்த் போட்டிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 101 பதக்கங்களையும் இந்தியா வென்றுள்ளது.

சொந்த மண்ணில் அள்ளிய பதக்கங்களில் 39 தங்கம், 26 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்கள் அடக்கம்.

இம்முறை 14 விளையாட்டுப் பிரிவுகளில் 215 வீரர்களை இந்தியா களமிறக்குகிறது. மிகப்பெரிய தடகள போட்டி அணியாக 41 பேர் இந்தியாவிலிருந்து கிளாஸ்கோ வந்திருக்கின்றார்கள்.

இலங்கையிலிருந்து 104 வீரவீராங்கனைகள்

இலங்கை, 1948-ம் ஆண்டு சுதந்திரத்தோடு காமன்வெல்த்துடன் இணைந்தது.

சுதந்திர இலங்கையின் முதலாவது தங்கத்தை 50-ம் ஆண்டு ஆக்லண்ட் போட்டிகளில் டன்கன் வைட் தடகளத்தில் வென்றெடுத்தார்.

இதுவரை மொத்தமாக 4 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம் என 12 பதக்கங்கள் இலங்கை வசம் உள்ளன.

இம்முறை காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 13 விளையாட்டுப் பிரிவுகளில் 99 வீரவீராங்கனைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 வகையான போட்டிகளுக்காக 5 பேரும் கிளாஸ்கோ வந்தடைந்துள்ளனர்.

ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோவில் ஏற்கனவே 1970- மற்றும் 86-ம் ஆண்டுகளில் இரண்டு தடவைகள் காமன்வெல்த் விளையாட்டு விழாக்கள் நடந்துள்ள போதிலும், இம்முறை கிளாஸ்கோ போட்டி தான் ஸ்காட்லாந்தில் நடக்கும் மிகப்பெரிய பல்துறை விளையாட்டு விழா.

எனினும் கிளாஸ்கோ உள்ளிட்ட ஸ்காட்லாந்து கடந்த 10 ஆண்டுகளில் பலதரப்பட்ட உலக, ஐரோப்பிய, மற்றும் பிரிட்டிஷ் விளையாட்டு போட்டிகளை நடத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.